சிவகங்கை: அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு 3 நாட்களாகியும், இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை. அஜித்குமார் மீது புகார் தெரிவித்த நிகிதாவுக்கு ஆதரவாக, தனிப்படை விசாரணைக்கு அழுத்தம் கொடுத்த உயர் அதிகாரி யார் என பல்வேறு கேள்விகளுக்கு சிபிஐ விசாரணையில்தான் விடை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் ஜூன் 28-ம் தேதி தனிப்படை போலீஸார் விசாரணையின் போது உயிரிழந்தார். இந்த வழக்கில், முதலில் தனிப்படை போலீஸாருக்கு சாதகமாக திருப்புவனம் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதியப்பட்டது. அதில், விசாரணையின்போது அஜித்குமார் தப்பியோடியபோது கீழே விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தனிப்படையில் இருந்த வாகன ஓட்டுநர் உட்பட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஜூன் 30-ம் தேதி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, இந்த வழக்கு தொடர்பாக அரசு மற்றும் காவல் துறை மீது கடுமையான அதிருப்தியை தெரிவித்தது. மேலும் போலீஸார் தாக்கியது தொடர்பான வீடியோ மற்றும் பிரேதப் பரிசோதனை விவரங்கள் அடிப்படையில் கொலை வழக்காக மாற்றப்பட்டு, விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி சுகுமாரன் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து ஓட்டுநர் தவிர்த்து 5 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
ஜூலை 1-ம் தேதி சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து திருப்புவனம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் வெங்கடஷ்பிரசாத் விசாரணை நடத்தினார். மேலும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனிடையே, இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அவர் ஜூலை 2-ம் தேதியிலிருந்து தொடர்ந்து விசாரித்து வருகிறார். மேலும் அவரிடம் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் போலீஸார் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர் சாட்சிகளிடம் விசாரித்து வருகிறார்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு 3 நாட்களான பின்பும், அந்த அமைப்பின் அதிகாரிகள் இன்னும் விசாரணையை தொடங்கவில்லை. அவர்கள் எப்போது தொடங்குவர் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீதே பல்வேறு மோசடி புகார்கள் உள்ளன. இதனால் அவர் கொடுத்த புகாரே உண்மையா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் நிகிதாவுக்கு ஆதரவாக, தனிப்படை விசாரணைக்கு அழுத்தம் கொடுத்த உயர் அதிகாரி யார்? இதில் மாவட்ட எஸ்பி, டிஎஸ்பிக்கு எதுவும் தொடர்பு இருக்கிறதா? ஆகிய ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன.
போலீஸார் கோயிலில் இருந்த சிசிடிவி கேமரா ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும் புகார் உள்ளது. இதுபோன்ற புகார்களில் உள்ள உண்மைத் தன்மையை வெளிக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு சிபிஐக்கு உள்ளது. வீடியோ எடுத்தவர் உட்பட பல சாட்சிகள் தங்களுக்கு பயமாக இருப்பதாகவும், போலீஸ் பாதுகாப்பு கேட்டும் தொடர்ந்து பேட்டி அளித்து வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் சிபிஐ உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே சாத்தான்குளம் வழக்கு போன்ற பல வழக்குகளில் சிபிஐ விசாரணை தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை, நீதிமன்றம் மேற்பார்வையில் சிபிசிஐடி விசாரணையே போதும் என அஜித்குமார் குடும்ப வழக்கறிஞர் கணேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதனால் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை உடனடியாக தொடங்கி, சில மாதங்களிலேயே சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.