சென்னை: 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ‘உடன்பிறப்பே வா’ என்ற பெயரில் பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளின் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தொகுதி மக்களின் மனநிலை, திமுக அரசு மீதான மக்களின் எண்ணவோட்டம், திமுக அரசுக்கான ஆதரவு ஆகியவை குறித்து நிர்வாகிகளுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தி விவரங்களை கேட்டறிந்து வருகிறார் ஸ்டாலின்.
மேலும், தொகுதியில் கட்சியினரின் மனநிலை, கட்சியினருக்கு உள்ள குறைகள், கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து தனித்தனியாக நிர்வாகிகளிடம் கேட்டறிகிறார் ஸ்டாலின்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் திட்டத்தோடு பல்வேறு முன்னெடுப்புகளை இப்போதே தொடங்கிவிட்டது திமுக. ஒரு பக்கம் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் முழக்கத்தோடு வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை பணிகளை திமுக தொடங்கியுள்ளது. இந்த சூழலில் ‘ உடன்பிறப்பே வா’ எனும் பெயரில் தொகுதி வாரியாக நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார் ஸ்டாலின்.
இதன் ஒரு பகுதியாக இன்று தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பட்டுக்கோட்டை, பாபநாசம் சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணப்பாறை தொகுதி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில் பட்டுக்கோட்டை தொகுதி திமுக வசம் உள்ளது. பாபநாசம், மணப்பாறை தொகுதிகள் திமுக கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் வசம் உள்ளது.