பொதுவாக குடும்பங்களில் நாம் காண்பதுதான். ஒரு பிள்ளை செல்லப்பிள்ளை, அவருக்கு எல்லாம் நடக்கும் ஆனால் ஒரு பிள்ளை உழைப்புப் பிள்ளை இவர் எப்போதும் நெருக்கடியிலும் அழுத்தத்திலுமே இருப்பார். இந்திய அணி என்னும் குடும்பத்தில் பும்ரா செல்லப்பிள்ளை, இந்தத் தார்ச்சாலைப் பிட்சில் சிராஜ் உழைக்கும் பிள்ளை. இந்தத் தார்ச்சாலைப் பிட்சில் செல்லப்பிள்ளைக்கு ரெஸ்ட் அளித்து உழைப்புப் பிள்ளை சிராஜிடமிருந்து கூடுதல் உழைப்பு கோரப்பட அந்த பணிக்கு தன் உடல் தகுதியை வைத்திருந்த அவர் பிரமாதமாக கொடுத்த இலக்கை நிறைவேற்றினார்.
எட்ஜ்பாஸ்டன் என்னும் படுமோசமான ஃபிளாட் பிட்சில் சிராஜ் நேற்று 19.3 ஓவர்கள் வீசி 3 மெய்டன்களுடன் 70 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இது உண்மையில் அசாத்தியமான ஒரு பந்து வீச்சுதான். பிரசித் கிருஷ்ணா சுத்த வேஸ்ட் என்பது புரிந்துவிட்டது, அடுத்து இவருக்குப் பதிலாக யார் என்பதுதான் இப்போது கம்பீர்-கில் கையில் இருக்கும் கேள்வி.
நேற்று வந்தவுடனேயே 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து, அதுவும் ஜோ ரூட், ஆக்ரோஷ பேட்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை வீட்டுக்கு அனுப்பினார். பும்ரா இருக்கும் போது சிராஜ் செகண்ட் ஃபிடில் ஆக இருக்கிறார், பும்ரா இல்லாத போது கூடுதல் முயற்சியை இட்டு அற்புதமாக வீசுகிறார். இதற்குப் புள்ளி விவர உடன்பாடும் உண்டு. கிரிக் இன்போ தகவல்களின் படி பும்ராவுடன் சிராஜ் 23 டெஸ்ட்கள் ஆடியிருக்கிறார், இதில் சிராஜின் சராசரி 33.82. பும்ரா இல்லாமல் சிராஜ் ஆடியது 15 டெஸ்ட் போட்டிகள். இதில் அவரது சராசரி 25.20.
அதே போல் முகமது ஷமியுடன் ஆடும்போது சிராஜின் சராசரி 34.96. பும்ரா, ஷமி இருவருடன் ஆடும்போது சிராஜின் சராசரி 33.05. பும்ரா, ஷமி இருவருமே இல்லாத போது சிராஜின் சராசரி 22.27 . இதற்குக் காரணமுள்ளது, பும்ரா, ஷமி இருவரும் இருக்கும்போது சிராஜ் ரெட் ஹாட் புதிய பந்தில் வீச வாய்ப்பு மிகமிகக் குறைவு. பழைய பந்தில்தான் வீச முடியும். அப்படி வீசும்போது கட்டுப்படுத்தும் ரோலில்தான் பெரும்பாலும் வீச முடியும்.
ஐபிஎல் தொடர்களில் அதிகம் வீசி வீசி இப்போது சிராஜிடம் அவுட்ஸ்விங்கர்கள் காணாமல் போயுள்ளன. அதை மீட்டெடுக்க பயிற்சியாளர்கள் உதவினால் சிராஜ் உண்மையில் அயல்நாட்டுப் பிட்ச்களில் டெட்லியாக இருப்பார். சில வேளைகளில் பும்ரா போடும் வேகத்தில் அவரைப்போலவே பேட்டர்களைத் திணறச் செய்கிறார் சிராஜ். ஆனால் பெயர் கிடைக்காது, எப்படி விவ் ரிச்சர்ட்ஸ் இருக்கும் போது கார்டன் கிரீனிட்ஜ், ராய் பிரெடெரிக்ஸ், ஹெய்ன்ஸ் என்னதான் ஆடினாலும் பெயர் கிடைக்காது அதுபோலவே இதுவும்.
இந்த டெஸ்ட்டிலும் கூட ஆகாஷ் தீப் தான் முதல் ஓவரை வீசினார், சிராஜ் தான் வீச வேண்டிய முனையை தானே தேர்ந்தெடுக்க முடியாத இடத்தில் தான் இருக்கிறார். ஆனால் ஸ்விங்கில் சமரசம் செய்து கொள்ளவில்லை பிட்ச் உதவி கொஞ்சம் கூட இல்லை. ஆனாலும் இங்கிலாந்து பவுலர்களை விட நன்றாகவே ஸ்விங் செய்தார் சிராஜ்.
இன்னும் கொஞ்சம் அவர் இன்ஸ்விங்கரை குறைத்து அவுட் ஸ்விங்கரை அதிகம் வீசியிருக்கலாம் என்று நாம் நினைக்கும் போது ஆஃப் திசையில் பேக்டு பீல்டை வைத்துக் கொண்டு வீச மன தைரியம் வேண்டும். அதனால் சிராஜ் என்ன செய்தார் சாதுரியமாக ஸ்டம்ப் அட்டாக் என்ற ஒரு உத்தியைக் கையாண்டார். அது சில வேளைகளில் பதற்றத்தை எதிர் வீரர்களுக்கு உருவாக்கியது, அதனால்தான் புரூக் இறங்கி வந்து அவரை பவுண்டரி, சிக்ஸ் விளாசினார், இது ரிஸ்க் ஷாட். இதில் அவுட் ஆனால் அவ்வளவுதான். ஆகவே இந்த லெந்த்தில் வீசுவோம், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசி அவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் கட், ட்ரைவ்களுக்கு ஏன் வீச வேண்டும் என்பதும் சிராஜின் எண்ணமாக இருக்கலாம்.
சிராஜ் ஜியோ ஹாட்ஸ்டாரில் கூறும்போது, “5 விக்கெட்டுகளைச் சாய்க்க ஓராண்டாக காத்திருக்கிறேன், 4 விக்கெட்டுகளுடன் முடிகிறேன், நான் நன்றாக வீசினாலும் விக்கெட்டுகள் கிடைப்பதில்லை. இது எனக்கு சிறப்புத் தருணம், ஏனெனில் இங்கிலாந்தில் நான் அதிகமாக ஒரு இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையே கைப்பற்றியிருக்கிறேன்.” என்றார்.
ஆகவே சிராஜை ஏதோ செகண்ட் ஃபிடில் பவுலர் என்று கருத வேண்டாம் என்று அவரே அணித்தேர்வுக்குழுவுக்கு செய்தி அனுப்பியுள்ளார். இப்படிப்பட்ட மண் பிட்சில் அவர் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்றால் அவரது தன்னம்பிக்கை உயரும் பந்து வீச்சு மேலும் மெருகு பெறும்.
எல்லாவற்றிற்கும் மேலாக பும்ரா, ஷமி அளவுக்கு ஓவர்களை சில வேளைகளில் வீசினாலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடினாலும் அவரது உடல் தகுதி ஷமி, பும்ராவுக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது.