திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கடந்த 2018 மே மாதத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது.
இந்நிலையில் மலப்புரம் மற்றும் பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழக்கமான பரிசோதனையின்போது 2 பேருக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டன. இதையடுத்து இவர்களின் ரத்த மாதிரிகள் உடனடியாக புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த வைரஸ் தொடர்பாக மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வேறு யாருக்கேனும் இந்த அறிகுறி உள்ளதா என கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 26 சிறப்புக் குழுக்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், “நிபா வைரஸ் பரவலை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அவற்றை பலப்படுத்தியுள்ளோம். நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண காவல்துறையின் உதவியை நாடியுள்ளோம். மக்களுக்கு உதவ ஹெல்ப் லைன்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய வாரங்களில் இயற்கைக்கு மாறான மரணம் ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம்” என்றார்.