சென்னை: மத்திய அரசின் இஎஸ்ஐ திட்டத்தின் மூலம் முதல்முறையாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் என மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்தியாவில் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை வழங்கும் இஎல்ஐ இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ரூ.99,446 கோடி நிதி ஒதுக்கியது. முதல்முறையாக பணியில் சேரும் இளைஞர்கள், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனம் இருதரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டமானது 2 பகுதிகளாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன்படி முதல் பகுதியில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் முதல் முறையாக பணியில் இணைந்து வைப்பு நிதிக்கு பதிவு செய்யப்படும் ஊழியர்கள் அங்கு ஓர் ஆண்டு வேலை செய்யும் பட்சத்தில், அவருக்கு 2 தவணையாக ரூ.15 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் முதல் தவணையாக 6 மாதங்களில் ரூ.7,500-ம், இரண்டாம் தவணையாக 12 மாதங்களில் அடுத்த ரூ.7,500-ம் வழங்கப்படும். இவை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இரண்டாம் பகுதியில் ஒவ்வொரு புதிய தொழிலாளர்களை நிறுவனத்தில் இணைக்கும்போது நிறுவன உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை ஊக்கத்தொகை கிடைக்கும். அதன்படி ரூ.10 ஆயிரம் வரை சம்பளம் பெறும் தொழிலாளர்களை நிறுவனத்தில் சேர்க்கும்போது ரூ.1000-ம், ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளத்தில் தொழிலாளர்களை சேர்க்கும்போது ரூ.2 ஆயிரமும், ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறும் தொழிலாளர்களை சேர்க்கும் பட்சத்தில் ரூ.3 ஆயிரம் வரை நிறுவன உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
2025 ஆகஸ்டு 1-ம் தேதிமுதல் அமலுக்கு வரும் இத்திட்டம் 2027-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவடையும். உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு மட்டும் கூடுதலாக 2 ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கும். இத்திட்டத்தால் அமைப்பு சாரா தொழில் துறைகளில் உள்ளவர்கள் அமைப்பு சார்ந்த தொழில் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.