சிவகங்கை: “ஜூன் 28 மால 6.30 மணியளவில் அஜித்குமாரை ஆட்டோவில் போலீஸார் கொண்டு வந்தனர். நான் பரிசோதித்தபோது அஜித்குமார் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிந்தது. அதை நான் போலீஸாரிடம் தெரிவித்தேன். உடலை பிரேதப் பரிசோதனை அறையில் வைக்கச் சொன்னேன். ஆனால், உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் உடலை எடுத்துச் சென்றனர்.” என மாவட்ட நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீஸார் கொடூரமாக தாக்கி ஜூன் 28-ம் தேதி கொலை செய்தனர்.
இதையடுத்து அதை மறைக்க நினைத்த போலீஸார், தாங்கள் விசாரித்து கொண்டிருந்தபோது, அஜித்குமார் தப்பியோட முயன்று கீழே விழுந்தார். அதில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு, ஆட்டோவில் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.
தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சிவகங்கை தனியார் மருத்துவமனைக்கும், பின்னர் அங்கிருந்தும் மதுரை தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றோம். அங்கு அஜித்குமார் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்ததாக கூறினர்.
இந்நிலையில், இன்று (ஜூலை 4) மாவட்ட நீதிபதி முன் திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன், ஆட்டோ ஓட்டுநர் அய்யனார் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
பின்னர் அரசு மருத்துவர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஜூன் 28 மால 6.30 மணியளவில் அஜித்குமாரை ஆட்டோவில் போலீஸார் கொண்டு வந்தனர். நான் பரிசோதித்தபோது அஜித்குமார் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிந்தது. அதை நான் போலீஸாரிடம் தெரிவித்தேன். உடலை பிரேதப் பரிசோதனை அறையில் வைக்கச் சொன்னேன். ஆனால், உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் உடலை எடுத்துச் சென்றனர். இதை தான் நீதிபதியிடம் தெரிவித்தேன். மற்றபடி, அவரது உடலில் எந்த மாதிரியான காயங்கள் இருந்தன என்பதை நான் கவனிக்கவில்லை” என்றார்.
மடப்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அய்யனார் கூறுகையில், “எனது ஆட்டோவில் தான் போலீஸார் அஜித்குமாரை ஏற்றி, திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அஜித்குமாரை 4 போலீஸார் தூக்கி வந்தனர். அப்போது அவர் உடல் அசைவற்று இருந்தது. கண்கள் மூடி இருந்தன. அவர் இறந்துவிட்டதாக போலீஸாரும் பேசிக் கொண்டனர்.” என்றார்.