திருப்பூர்: அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில், மாமியார் சித்ராதேவி இன்று (ஜூலை 4) கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் ஜெயம் கார்டனை சேர்ந்தவர் கவின்குமார் (29). இவரது மனைவி ரிதன்யா (27). கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில், ரிதன்யா கடந்த 28-ம் தேதி மொண்டிபாளையம் அருகே காரில் விஷம் அருந்தி தற்கொலை செய்தார்.
இறப்பதற்கு முன்பாக ரிதன்யா, கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது குற்றம்சாட்டி தனது தந்தை அண்ணாதுரைக்கு அனுப்பிய வாட்ஸ்அப் ஆடியோ பதிவு, தமிழ்நாட்டில் பலரையும் உலுக்கியது. கோட்டாட்சியர் விசாரணை நடந்துவந்த நிலையில், ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது துன்புறுத்தல் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சேவூர் போலீஸார் வழக்கு பதிந்தனர்.
இதில் கவின்குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி மட்டும் கைது செய்யப்பட்டனர்.சித்ராதேவி உடல்நிலையை காரணம் காட்டி கைது செய்யப்படவில்லை. இதையடுத்து வழக்கில் அரசியல் அழுத்தம் இருப்பதால் கைது செய்யப்படவில்லை என, ரிதன்யாவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், 5 நாட்களுக்கு பிறகு இன்று (ஜூலை 4) ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவி கைது செய்யப்பட்டார்.
ரிதன்யா தற்கொலை தொடர்பாக மூவரையும் போலீஸார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும் என ரிதன்யா குடும்பத்தினர் தெரிவித்து வரும் நிலையில், மாமியார் சித்ராதேவி கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தந்தை எஸ்.பி.யுடன் சந்திப்பு: இந்நிலையில் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவை இன்று சந்தித்து, வழக்கு தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.
தொடர்ந்து அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறும்போது, “மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். இந்த வழக்கு தொடர்பாக 30 பேரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. எனது மகள் பாதிக்கப்பட்டது தொடர்பாக, சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் யாரேனும் பார்த்திருந்தால், அவர்களும் வந்து தகவல் அளிக்கலாம். அதனையும் விசாரிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். எனது மகள் ரிதன்யா கவின்குமார் ஆகியோர் கடைசியாக தொலைபேசியில் உரையாடிய விவரங்களையும் போலீஸாரிடம் கேட்டுள்ளோம்.
பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. என் மகள் தற்கொலைக்கு, போலீஸார் உரிய நீதியை பெற்றுத்தருவார்கள் என்று நம்பி இங்கு வந்து சந்தித்துள்ளேன். என் மகள் தற்கொலைக்கு காரணமானவர்களுக்கு மரண தண்டனை பெற்றுத்தர தர வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜாமீன் விசாரணை 7-ம் தேதி ஒத்திவைப்பு: கவின்குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஜாமீன் மனுவை, திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று நீதிபதி குணசேகரன் விசாரித்தார். அப்போது கவின்குமார் தரப்பில் கால அவகாசம் கேட்ட காரணத்தினால், திருப்பூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி குணசேகரன், ஜாமீன் தொடர்பான விசாரணையை வரும் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.