பிரகாசம்: ஆந்திர மாநிலத்தின் பிரகாசம் மாவட்டம், நரசிம்மாபுரத்தில் குடிநீர் திட்டத்துக்கு துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று அடிக்கல் நாட்டினார்.
விழாவில் அவர் பேசியதாவது: 2029-ல் ஆட்சிக்கு வந்ததும் எங்களை ஒரு கை பார்ப்போம் என முன்னாள் முதல்வர் ஜெகன் அடிக்கடி மிரட்டி வருகிறார். சக மனிதர்களை இவ்வாறு மிரட்டியதால்தான் தனக்கு இந்த நிலைமை என்பதை ஜெகன் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்ட நிதியை முந்தைய ஜெகன் அரசு பயன்படுத்தவில்லை.
மத்திய அரசுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக ரூ.1,290 கோடியில் இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன் அடைவார்கள். இங்குள்ள லட்சுமி சென்னகேசவுலு கோயில் உட்பட பல்வேறு கோயில்களின் நிலங்களை ஜெகன் ஆட்சியில் அவரது கட்சியினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த நிலங்களை மீட்க தனி கமிட்டி அமைக்கப்படும். அதன் மூலம் கோயில் நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும். இவ்வாறு பவன் கல்யாண் கூறினார்.