மதுரை: மதுரை எய்ம்ஸ் தலைவர் பிரசாந்த் லவானியா தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் தோப்பூர் எய்ம்ஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி ஹனுமந்தராவ், எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ராணி குமார், சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி ஹனுமந்தராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எய்ம்ஸ் 4-வது ஆண்டு மாணவர் சேர்க்கை நிறைவு பெற்று, ராமநாதபுரத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர். தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடப் பணி தொடங்கப்பட்டு, பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பருக்குள் பணிகள் நிறைவடையும். 2026 ஜனவரி மாதம் முதல் புதிய கட்டிடத்தில் கல்லூரி செயல்படும்.
ஜனவரிக்குள் ஆய்வகங்கள், கல்லூரியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான வசதிகள் மற்றும் 150 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை உள்ளிட்டவை அமைக்கப்படும். 2027-க்குள் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவுபெற்று, முழுமையாக செயல்படத் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.