சென்னை: பாமகவில் இருந்து அக்கட்சி எம்எல்ஏ இரா.அருள் நீக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வகிக்கும் கொறடா பதவியில் இருந்து மாற்றக்கோரி பேரவை தலைவரிடம் அன்புமணி சார்பில் கடிதம் வழங்கப்பட்டது.
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக பாமக சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருளை கட்சியின் இணை பொதுச்செயலாளராக ராமதாஸ் நியமித்தார். இதையடுத்து, மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து இரா.அருளை நீக்கிய அன்புமணி, அந்த பொறுப்பில் க.சரவணன் என்பவரை நியமித்தார். தொடர்ந்து, இரா.அருளை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார்.
தமிழக சட்டப்பேரவையில் பாமக கட்சி தலைவராக ஜி.கே.மணியும், கட்சியின் கொறடாவாக இரா.அருளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று பாமக உறுப்பினர்கள் ச.சிவக்குமார், எஸ்.பி.வெங்கடேசன், எஸ்.சதாசிவம் மற்றும் வழக்கறிஞர் க.பாலு ஆகியோர் தலைமை செயலகம் வந்து பேரவை தலைவர் மு.அப்பாவுவை சந்தித்து கொறடா பதவியில் இருந்து இரா.அருளை மாற்றக் கோரியும், புதிய கொறடாவாக ச.சிவக்குமாரை நியமிக்க கோரியும் அன்புமணி அளித்த கடிதத்தை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் பாலு கூறியதாவது: கட்சியின் 5 எம்எல்ஏக்களில் பெரும்பான்மை முடிவின் அடிப்படையில் இரா. அருளை மாற்றக்கோருவதை பேரவை தலைவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் விரும்பினாலும்கூட வேறு முடிவு எடுக்க முடியாது. உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். அருள் கட்சியில் இருந்து மட்டுமே நீக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக அவர் எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பதில்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் கொறடாவாக நீடிக்க முடியாது.
அரசியல் கட்சியை பொறுத்தவரை பொதுக்குழுதான் முக்கியமானது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் தலைவர் அன்புமணி, கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோர் தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். கட்சியின் நிறுவனர் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களுக்கு அழைக்கப்பட்டு அவருடைய வழிகாட்டுதலின்படி முடிவுகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ராமதாஸ் கடிதம்: இதைத்தொடர்ந்து, அருள், பேரவை செயலர் அலுவலகத்தில் ஒரு கடிதத்தை அளித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய அக்கடிதத்தில், “பேரவையில் பாமக உறுப்பினர்கள் 5 பேர் உள்ளனர். கட்சியின் கொறடாவாக சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருள் செயல்பட்டு வருகிறார். பேரவை கால அவகாசம் உள்ள வரை அவரே கொறடாவாக நீடிப்பார். செயல்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.
பின்னர், இரா.அருள் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கட்சியின் தலைவர் ராமதாஸ் தான். அன்புமணி செயல் தலைவர். என்னை நீக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு தான் உள்ளது” என்றார்.