சென்னை: கொள்கை எதிரி, பிளவுவாத சக்திகளான திமுக, பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை என தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் விஜய் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஆனந்த், துணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், இணை செயலாளர் தாஹிரா, உறுப்பினர் சேர்க்கை அணி மாநில செயலாளர் விஜயலட்சுமி உட்பட கட்சி மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், சிறப்புக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 2-வது மாநில மாநாட்டையும், செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணமும் 2026 பேரவைத் தேர்தலில் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரம் கட்சி தலைவருக்கு வழங்குவதாகவும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விஜய்யை முதல்வர் வேட்பாளராக வைத்து தவெக தலைமையில் களம் காண வேண்டும் என்பது உள்ளிட்ட 2 சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், பரந்தூர் மக்கள் உரிமைக்காகத் துணை நிற்போம். கொள்கை எதிரிகளுடனோ, பிளவுவாத சக்திகளுடனோ என்றும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை என்பது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் விஜய் பேசியதாவது: மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை மதரீதியாக பிளவுப்படுத்தி, வேற்றுமையை விதைத்து அதில் பாஜக குளிர் காய நினைக்கிறது. அவர்களின் இந்த விஷமத்தனமான வேலைகள் தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது. இங்கு பெரியார், அண்ணாவை அவமதித்தோ, தமிழகத்தின் தலைவர்களை வைத்தோ அரசியல் செய்ய நினைத்தால் அதில் பாஜக ஒருபோதும் வெற்றி பெற முடியாது.
சுயநல அரசியல் லாபங்களுக்காக பாஜகவுடன் கூடி குலைந்து கூட்டணிக்கு போக, தமிழக வெற்றிக் கழகம் ஒன்றும் திமுகவோ, அதிமுகவோ இல்லை. கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை என்பதில் தவெக மிக உறுதியாக இருக்கிறது. கூட்டணி என்றாலும், தமிழக வெற்றிக் கழகம் தலைமையில்தான் அமையும். அது திமுக, பாஜகவுக்கு எதிராகத்தான் இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
பரந்தூர் மக்களை சந்தித்து விமான நிலையம் அமைக்கப்படாது என முதல்வர் உறுதியளிக்க வேண்டும். இல்லையென்றால், பரந்தூர் மக்களையும், விவசாயிகளையும் நானே அழைத்து வந்து தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து முறையிடுவேன். இதனால், வரும் பிரச்னைகளை சந்திக்க நான் தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.