சென்னை: விதிகளைமீறி திமுக ஐடி விங்கை சேர்ந்தவர்களை ஏபிஆர்ஓ பணியிடங்களில் நியமிக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (ஏபிஆர்ஓ) பணியிடங்களில் நியமனம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல்களுடன் கூடிய தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது. அத்தீர்ப்புகளை மீறி ஸ்டாலின் அரசு, திமுக ஐடி விங் பணியாளர்களை தகுதியின்றி நியமிக்க முயல்வதாக செய்திகள் வருகின்றன. இதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதல் பெஞ்ச் 2016-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், ஏபிஆர்ஓ ஆள்சேர்ப்புக்கான விதிகளை தளர்த்துவது, தகுதியானவர்களை புறக்கணிப்பது நியாயமற்றது என்று கண்டித்து, விதிகளைத் தளர்த்துவது, விதிவிலக்காக மட்டும் இருக்க வேண்டுமே தவிர, வழக்கமான நடைமுறையாக இருக்கக் கூடாது என்று தெளிவாகத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஏபிஆர்ஓ பணிக்கு இளங்கலை பட்டப்படிப்புடன், பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு அல்லது மீடியா சயின்ஸ் படிப்பு கட்டாயமாக்கப்பட்ட அரசாணையை திரும்பப் பெற திமுக அரசு முடிவெடுத்திருப்பதாகத் தெரியவருகிறது. இது, தகுதியற்றவர்களையும், ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களையும் ஏபிஆர்ஓ பணிக்கு நியமிக்கும் திமுக அரசின் மோசமான முயற்சியாகவே கருதப்படுகிறது.
திமுக அரசு, ஏபிஆர்ஓ பணியின் அடிப்படைத் தகுதிகளை புறக்கணித்து, திமுக ஐடி விங்கை சேர்ந்தவர்களை, பத்திரிகைத் துறையில் எந்த அனுபவமோ கல்வித் தகுதியோ இல்லாமல், தற்காலிக நியமனம் என்ற பெயரில் வயது, சாதி, மகளிர், ஊனமுற்றோர் ஒதுக்கீடு விதிகளுக்கு, விதிவிலக்கு அளித்து நியமிக்க முயல்வதாகத் தெரியவருகிறது. மேலும், தேர்தல் ஆதாயத்துக்கு இவர்களைப் பயன்படுத்துவதற்கான உள்நோக்கமாகவே தோன்று
கிறது.
பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் கல்வி கற்று, வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைத் தகர்க்கும் இந்த முடிவு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைப் பறிப்பதாக உள்ளது. இதற்கு மாணவர்கள் மற்றும் பத்திரிகைத் துறையினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகளை மதித்து, தற்காலிக நியமனம் என்ற பெயரில் தகுதியற்றவர்களை நியமிக்கும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும். கடந்த 2022-ம் ஆண்டு இந்த அரசு வெளியிட்ட அரசாணையின்படி ஏபிஆர்ஓ பணிக்கு பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு அல்லது மீடியா சயின்ஸ் துறையில் குறைந்தபட்சம் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்களை, டிஎன்பிஎஸ்சி மூலம் மட்டுமே நியமிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.