சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகாசி அருகே திருத்தங்கல் ஶ்ரீ நின்ற நாராயணப்பெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். புராதான சிறப்பு மிக்க இக்கோயில் குடைவரை முறையில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆனி பிரம்மோற்சவ தேரோட்ட திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு ஆனி பிரம்மோற்சவ திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக, செங்கமலத்தாயார் சமேத ஸ்ரீ நின்ற நாராயணப்பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதன்பின் கருட கொடி பட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
ஆனி பிரமோற்சவ விழாவில் ஜூலை 8-ம் தேதி இரவு கருட சேவையும், 10-ம் தேதி இரவு சயன சேவையும் நடைபெறுகிறது. ஜூலை 12-ம் தேதி காலை 8:05 மணிக்கு ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, செயல் அலுவலர் தேவி, தக்கார் லட்சுமணன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.