‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ள நிலையில், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கல்வி சார்ந்த நிகழ்வுகளுக்கு மாணவிகளை வெளியூர் அழைத்துச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் 20 பக்க செயல்முறைகள் முழுவதும் ஆங்கிலத்திலேயே உள்ளதால் தமிழ் ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
மதுரை உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றின் தீர்ப்பின் அடிப்படையில் மணவர்கள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு நடவடிக்கைகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார்.
பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கல்வி சார்ந்த நிகழ்வுகளுக்கு மாணவிகளை வெளியூர் அழைத்துச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் நேற்று முன்தினம் வெளியிட்ட 20 பக்கங்களை கொண்ட செயல்முறைகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே உள்ளன.
இது குறித்து ஆசிரியர்கள் கூறியது: ஆசிரியராக இருந்தாலும் பலரும் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள் அல்ல. ஒரு நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கும் போது அதை தமிழில் வெளியிட்டால் தான் அனைவரும் எளிதில் அதை பற்றி தெரிந்து கொள்ள முடியும்’ என்றனர்.
இது குறித்து தமிழ் ஆர்வலர்கள், பெற்றோர்கள் தரப்பில் கூறியது: எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என முழங்கும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையே இதுபோல ஆங்கிலத்தில் செயல்முறைகளை வெளியிடுவது சரியான போக்கு அல்ல. தமிழ்நாட்டிலேயே தமிழுக்கு கெட்-அவுட், ஆங்கிலத்துக்கு கட்-அவுட்டா? இதுபோன்ற செயல் முறைகள் ஆசிரியர்கள் மட்டும் அல்ல பெற்றோர்களும், மாணவ மேலாண்மை குழுவினரும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மட்டுமல்லாது, இனி வரும் அனைத்து அறிவிப்புகள், நெறிமுறைகளையும் தமிழிலேயே வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இது குறித்து கல்வித் துறை வட்டாரத்தில் கேட்டபோது, ”இதுபோல ஏற்கெனவே சில செயல்முறைகள் ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளன. அதை தொடர்ந்து ஓரிரு நாளில் தமிழிலும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதேபோல இந்த செயல்முறைகளும் ஓரிரு நாளில் தமிழில் வெளியாகலாம்” என்றனர்.