சென்னை: “சோழகங்கம் ஏரியின் ஆயிரமாவது ஆண்டு இப்போது கொண்டாடப்படும் நிலையில், அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் வரும் ஜூன் 23-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அந்த நாளில் இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்.” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் பெருமையை உலகுக்கு உணர்த்திய மன்னர்களில் ஒருவரான ராஜேந்திர சோழன், 1023-ஆம் ஆண்டில் கங்கை நதி பாயும் வட இந்தியா வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரையும், கங்கை கொண்ட சோழீச்சுரம் என்ற ஆலயத்தையும் அமைத்தார்.
அவற்றின் தொடர்ச்சியாக 1025 ஆம் ஆண்டில் இப்போது பொன்னேரி என்றழைக்கப்படும் சோழகங்கம் ஏரியை கட்டி பாசன வசதியை ஏற்படுத்தினார். சோழகங்கம் ஏரி கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதை தமிழக அரசு மிகச்சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.
16 மைல் நீளமும் 3 மைல் அகலமும் கொண்டதாக வெட்டப்பட்ட சோழகங்கம் ஏரி இப்போது தூர்வாரப்படாமல் குறுகிக் கிடக்கிறது. இந்த ஏரியுடன் இணைக்கப்பட்ட சோழர் காலத்தைய பாசனக் கட்டமைப்புகளும், ஏரிகளும் பராமரிப்பின்றி அழிந்து வருகின்றன. அவற்றை மீட்டெடுக்கும் நோக்குடன் அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டேன்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்தேன். ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. சோழகங்கம் ஏரியின் ஆயிரமாவது ஆண்டு இப்போது கொண்டாடப்படும் நிலையில், அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் வரும் ஜூன் 23-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அந்த நாளில் இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
அதுமட்டுமின்றி, ஜெயங்கொண்டத்தில் செயல்பட்டு வரும் அரசுக் கலை அறிவியல் கல்லூரிக்கு ராஜேந்திர சோழனின் பெயர் சூட்டப்பட வேண்டும். மேலும், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஏராளமான வரலாற்றுச் சின்னங்களும், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளும் உள்ள நிலையில், அவை குறித்து ஆட்சி செய்ய வசதியாக ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளும் வசதியுடன் வரலாற்றுத் துறையையும் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.