திருவனந்தபுரம்: கேரளாவில் 18 வயது இளம்பெண்ணுக்கும், 38 வயது பெண்ணுக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் கோழிக்கோட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி ஜூலை 1 அன்று உயிரிழந்தார். இதையடுத்து, கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது உடலுக்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.
இளம்பெண்ணுக்கு நிபா வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பிரேதப் பரிசோதனை செய்தவர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல், கேரளாவின் பாலக்காடு மாவட்டம் தச்சநாட்டுக்காராவைச் சேர்ந்த 38 வயது பெண்மணி, தீவிர காய்ச்சல் காரணமாக கரிங்கல்லத்தாணி மருத்துவமனையிலும், பின்னர் மன்னார்க்காட் மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்றார். பின்னர், பெரிந்தல்மன்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நிபா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் (NIV) இன்று இதனை உறுதி செய்தது. அவரது உடல்நிலை மோசடைந்துள்ளதை அடுத்து, பெரிந்தல்மன்னா மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட மருத்துவ அதிகாரி (DMO) ஆர். ரேணுகா தெரிவித்துள்ளார்.
நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு மாவட்டங்களில் சுகாதார அதிகாரிகள் உஷார் நிலையில் உள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறியவும், அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கவுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், “புனேவில் இருந்து நிபா வைரஸ் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பே கேரளாவில் அது தொடர்பான நெறிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, வைரஸ் பரவுவதைத் தடுக்க மலப்புரம், கோழிக்கோடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் 26 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிய காவல்துறையின் உதவி கோரப்பட்டுள்ளது. மாநில மற்றும் மாவட்ட அளவில் உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்வார்கள். கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட இயற்கைக்கு மாறான அனைத்து மரணங்களும் கண்காணிக்கப்படும்” என்று தெரிவித்தார்.