ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநரில் இன்று நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
ஏழாம் நூற்றாண்டில் முகமது நபியின் பேரன் இமாம் ஹுசைன் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஸ்ரீநகரில் இன்று (ஜூலை 4) மொஹரம் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் கலந்து கொண்டு, இஸ்லாமிய ஆதரவு கோஷங்கள் மற்றும் ஈரான் ஆதரவு கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
மொஹரம் ஊர்வலத்தை முன்னிட்டு ஸ்ரீநகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொடர்ந்து 3-வது ஆண்டாகவும், வழக்கமாக செல்லும் முக்கிய வீதிகள் வழியாகவும் ஊர்வலம் அமைதியாக நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை ஸ்ரீநகரின் குரு பஜார் பகுதியில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. இதில் பங்கேற்க, ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் முன்னதாகவே வந்திருந்தனர். அங்கிருந்து தொடங்கிய ஊர்வலம், ஜஹாங்கீர் சௌக், மவுலானா ஆசாத் சாலை வழியாகச் சென்று தல்கேட் பகுதியில் நிறைவடைந்தது.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாதவாறு, ஊர்வலம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. மேலும், ஊர்வலம் செல்வதற்கான நேரமும் வரையறுக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. ஊர்வலம் எந்தெந்த பாதைகளில் செல்லும் என்பது குறித்தும், பொதுமக்களுக்கான மாற்றுப் பாதைகள் குறித்தும் போலீஸார் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பல இடங்களில் தன்னார்வளர்கள் குளிர்பானங்களை வழங்கினர். ஸ்ரீநகர் காவல்துறை சார்பிலும் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பழச்சாறுகள் விநியோகிக்கப்பட்டன. ஊர்வலத்தில் செல்பவர்கள் வெப்பத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஆங்காங்கே தண்ணீர் தெளிக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இத்தகைய ஊர்வலங்களுக்கு ஸ்ரீநகரில் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பியதை அடுத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.