லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதுகுறித்து வேலைவாய்ப்பு துறை அமைச்சர் அனில் ராஜ்பர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநில இளைஞர்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு உதவும் வகையில், உ.பி. ரோஜ்கர் மிஷனை உருவாக்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மூன்றாம் தரப்பு ஆட்சேர்ப்பு நிறுவனங்களை இளைஞர்கள் சார்ந்திருப்பது இனி தவிர்க்கப்படும்.
ஆண்டுக்கு 25,000 முதல் 30,000 வரையிலான இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவும், இந்திய தனியார் துறையில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவும் நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்திய மனித வளத்துக்கான உலகளாவிய தேவை அதிகரித்து வருகிறது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை இனி அரசே நேரடியாக ஏற்பாடு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.