அரசியல் படுத்தும் பாடு, திமுக-வினரும் தங்களை அறியாமலேயே இப்போது முருகன் பெயரை உச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தளவுக்கு தமிழ்க் கடவுளாம் முருகனை முன்வைத்து இப்போது தமிழக அரசியல் களம் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது.
2021-ல் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்ததாக சர்ச்சை வெடித்து, அந்த சேனலைச் சேர்ந்த சுரேந்திரன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த பாஜக கடுமையாக எதிர்வினையாற்றியது. அப்போது பாஜக மாநில தலைவராக இருந்த எல்.முருகன், கருப்பர் கூட்டத்தின் செயலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்தினார். அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக இதற்கு கெடுபிடிகளை தந்த போதும் வேல் யாத்திரை மூலம் முருக பக்தர்களை ஓரணியில் திரட்டியது பாஜக.
அதேபோல, 2023-ல் ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோயிலை மையப்படுத்தி தெரிவிக்கப்பட்ட சர்ச்சையான கருத்துகளைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்தன. இந்து முன்னணியும் பாஜக-வும் இணைந்து சென்னிமலையில் நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் முருக பக்தர்கள் திரளாக திரண்டு ஆளும் திமுக அரசை திகைக்க வைத்தார்கள்.
அதேபோல, திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக வெடித்த சர்ச்சையை நீதிமன்றம் வரைக்கும் எடுத்துச் சென்றன இந்து அமைப்புகள். இது தொடர்பாக நீதிமன்றத்தின் அனுமதியுடன் பிப்ரவரி 4-ம் தேதி மதுரை பழங்காநத்தத்தில் திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதும் ஆளும் கட்சியை யோசிக்க வைத்தது.
இப்படி தொலைநோக்குத் திட்டத்துடன் முருகனை அரசியல் ஆயுதமாக எடுத்த பாஜக, இப்போது அந்த ஆயுதத்தை திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளையும் கையிலெடுக்க வைத்திருக்கிறது. அப்படித்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையே பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்தியது.
அமைச்சர் சேகர் பாபு, எ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டவர்கள் இன்னும் கந்த சஷ்டி கவசத்தை மட்டும் தான் படிக்கவில்லை. அந்தளவுக்கு முருகனை தூக்கிப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். விளைவு, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மேடைகளில் வாள் கொடுத்து பழகிய திமுக-வினரும் இப்போது வெள்ளி வேல் கொடுக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.
இதையெல்லாம் உள்ளார ரசிக்கும் பாஜக ஜூன் 22-ம் தேதி, இந்து முன்னணிக்கு பின்னால் இருந்து கொண்டு மதுரையில் முத்தமிழ் முருகன் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இதையெல்லாம் பார்த்துவிட்டு பாமக தலைவர் அன்புமணி, “ஜூலை 25-ல் முருகனை வணங்கி செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து தமிழகம் முழுக்க 100 நாள் நடைபயணம் தொடங்க இருக்கிறேன்” என அறிவித்திருக்கிறார்.
“திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரங்கள் ஓதப்படாவிட்டால் போராட்டத்தில் குதிப்போம்” என அறிவித்திருக்கிறார் முருகனை எங்கள் முப்பாட்டன் என முழங்கி வரும் நாதக ஒருக்கிணைப்பாளர் சீமான். ஆக, 2026 சட்டமன்றத் தேர்தலில் யாரும் முருகனை விட்டுவைக்கமாட்டார்கள் போலிருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவரான கே.பி.ராமலிங்கம், “தமிழ்க் கடவுள் முருகன் அரசாட்சிக்கு உரிய ஆண்டவன். சிலர், கடவுள் மறுப்பு தான் பகுத்தறிவு என கருதுகின்றனர். ஆனால், முருகனின் வாழ்வியல் தான் உண்மையான பகுத்தறிவு. முருகன், தனது பக்தர்களுக்கு மட்டுமல்ல பாதகர்களுக்கும் அருள்பவர். அந்த முருகனை தமிழக பாஜக என்றுமே உயர்த்திப் பிடித்து வந்துள்ளது. அதேபோல், வேஷமின்றி முருகனை போற்றும் அரசியல் கட்சிகளின் அக்கறை வரவேற்புக்கு உரியது.
ஆனால், திமுக-வினரும் திக-வினரும் முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் மேடைக்கு மேடை அவமானப்படுத்தியவர்கள். இந்துக் கடவுளை மட்டும் தான் இவர்கள் மறுப்பார்கள். சிறுபான்மையினரின் ஓட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் கடவுள் மறுப்புக் கொள்கை எனும் வேஷம் போடுகிறார். ஆனால், அவர் பல வேள்விகளை நடத்தியவர் என்பதற்கு நானே நேரடி சாட்சி.
முருக பக்தர்கள் மீது திமுக மாறுபட்ட கருத்தை திணித்தது. அதனால் உருவான கொந்தளிப்பான சூழலால் தற்போது முருகன் மீதும், முருக பக்தர்கள் மீதும் திமுக-வுக்கு பாசம் பொங்குகிறது. இது, திமுக-வின் தேர்தலுக்கான பசப்பு வேலை என மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஸ்டாலின் முருகனை மதிப்பது உண்மையெனில் தைப்பூசத்துக்கு பழனிக்கு காவடி எடுத்து மலையேறி வந்து பஞ்சாமிர்தம் ருசிக்கத் தயாரா?” என்றார்.