புதுடெல்லி: இந்திய ஐ-போன் தொழிற்சாலையில் பணியாற்றிய சுமார் 300 சீன பொறியாளர்களை பாக்ஸ்கான் நிறுவனம் திரும்ப பெற்றதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்களை சீனாவின் பாக்ஸ்கான் நிறுவனம் அசெம்பிள் செய்து வழங்குகிறது. அந்த வகையில் பாக்ஸ்கான் தொழிற்சாலை தமிழகத்தில் அமைந்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், தமிழக தொழிற்சாலையில் பணியாற்றிய 300-க்கும் மேற்பட்ட சீன பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாக்ஸ்கான் நிறுவனம் திரும்ப பெற்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான காரணம் தெரியவில்லை.
இதையடுத்து, சீன பொறியாளர்கள் பார்த்த வேலையை தைவானைச் சேர்ந்தவர்கள் கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஐ-போன் 17 உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், சீன பொறியாளர்களை வீட்டுக்கு அனுப்பியதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.