புதுடெல்லி: அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனிநபர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் மல்லசந்திரா கிராமத்தைச் சேர்ந்த ரவிஷா கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார். அப்போது கார் விபத்தில் சிக்கி அதை ஓட்டிச் சென்ற ரவிஷா உயிரிழந்தார். இதையடுத்து ரூ.80 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரவிஷா மனைவி மற்றும் குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ரவிஷா காரை அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டியதாலேயே விபத்து நடந்துள்ளது. எனவே, இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரவிஷா குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையில், ரவிஷா அதிவேகமாக காரை ஓட்டியது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து ரவிஷா குடும்பத்தினரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.