2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சாட்சியாக வைத்துக் கொண்டு சொன்ன உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் நாளிதழ் பேட்டி ஒன்றில், “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில் பாஜக-வும் இடம்பெறும். அதிமுக-வைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவார்” என்று இபிஎஸ் தரப்புக்கு இன்னொரு ஷாக் கொடுத்திருக்கிறார்.
2024 மக்களவைத் தேர்தலின் போது அதிமுக கூட்டணிக்கு பாஜக பகீரத பிரயத்தனம் செய்தது. ஆனால் அண்ணாமலையின் அதிரடிகளால் அதிருப்தி கொண்ட இபிஎஸ், “பாஜக-வுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை” என திட்டவட்டமாக அறிவித்தார். அதிமுக-வின் இந்த முடிவால் உதிரிக் கட்சிகளை கூட்டு சேர்த்துக் கொண்டு தேர்தலைச் சந்தித்த பாஜக-வுக்கு ஓர் இடம் கூட கிடைக்கவில்லை. இதனால் இபிஎஸ் மீதும் அதிமுக மீதும் கடும் கோபத்தில் இருந்தார் அமித் ஷா.
மக்களவைத் தேர்தலைப் போலவே சட்டமன்றத் தேர்தலிலும் கோட்டைவிட்டு விடக்கூடாது என சுதாரித்த அவர், ‘உரிய முறையில்’ காரியத்தில் இறங்கினார். இதற்காக செங்கோட்டையன் என்ற ஆயுதத்தை அவர் கையிலெடுத்தார். ரெய்டுகளும் ஆரம்பமாகின. இரட்டை இலை வழக்கும் தூசிதட்டப்பட்டது.
இந்த மூவ்களை எல்லாம் பார்த்துவிட்டு தனது முடிவை மாற்றிக் கொண்ட இபிஎஸ், டெல்லிக்கே போய் அமித் ஷாவை சந்தித்துப் பேசி பாஜக கூட்டணிக்கு அச்சாரம் போட்டார். இதைத் தொடர்ந்து சென்னைக்கு வந்து அதிமுக உடனான கூட்டணியை அதிகாரபூர்வமாக அறிவித்தார் அமித் ஷா. கூட்டணி உறுதியானாலும் கூட்டணி ஆட்சியா கூட்டணியின் ஆட்சியா என்பதில் இரண்டு கட்சிகளும் மாறி மாறி கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கின்றன.
எப்படியாவது தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவையில் இடம்பிடித்து விட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறது பாஜக. “அதெல்லாம் முடியாது அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்” என்கிறார் இபிஎஸ். இந்த வாதத்தால் இப்போது இபிஎஸ் மீது மீண்டும் அதிருப்தி கொண்டிருக்கும் அமித் ஷா, அடுத்த விளையாட்டை ஆரம்பித்திருக்கிறார்.
பாஜக-வுக்கு அமைச்சரவையில் இடமளிக்காவிட்டால் நீங்கள் முதல்வர் ஆக முடியாது என்று இபிஎஸ்ஸை எச்சரிக்கும் விதமாகவே, “அதிமுக-வைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவார்” என்ற வார்த்தைகளை அமித் ஷா பயன்படுத்தியுள்ளார் என்கிறார்கள். இபிஎஸ் தொடர்ந்து முரண்டு பிடித்தால் மகாராஷ்டிரா பாணியில் செங்கோட்டையன் அல்லது எஸ்.பி.வேலுமணி போன்ற ஒருவரை முதல்வராக்கவும் தயங்க மாட்டோம் என்பது தான் அமித் ஷா தந்திருக்கும் சமிக்ஞை என்கிறார்கள்.
அமித் ஷா இப்படிச் சொன்ன பிறகு, “தேர்தலுக்குப் பிறகு நடப்பவற்றை அமித் ஷாவும் எடப்பாடி பழனிசாமியும் முடிவு செய்வார்கள்” என்று தமிழிசை போன்றவர்களும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர் என்று தமிழக பாஜக தலைவர்கள் இப்போது வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். ஆக, தங்களின் வார்த்தைக்குக் கட்டுப்படாவிட்டால் எதையும் செய்யத் தயங்கமாட்டோம் என்று இபிஎஸ்ஸுக்கு பாஜக-வினர் குறிப்பால் உணர்த்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டதற்கு, “இன்னொரு கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று அதே பேட்டியில் அமித் ஷா ஜி தெளிவாக கூறியுள்ளார். அப்படி இருக்கையில், அந்தக் கட்சியில் யார் முதல்வர் என்பதை அவர் சொல்ல இயலாது என்பதால் தான் அதிமுக-வைச் சேர்ந்தவர் முதல்வர் என்று பொதுவாக சொல்லியிருக்கிறார்.
பாஜக-வைச் சேர்ந்தவர் முதல்வராவார் என்று அவர் சொல்லியிருந்தால் அது குறித்து கேள்வி கேட்கலாம். அதை விட்டுவிட்டு தெளிவாக, எவ்வித சந்தேகங்களுக்கும் இடமில்லாமல் பேசியிருக்கும் அவரது பேச்சுக்கு கண், காது, மூக்கு வைத்து கேள்வி கேட்டால் அதற்கெல்லாம் எங்களிடம் பதில் இல்லை” என்றார்.
இன்னும் 10 மாதத்துக்குள் அதிமுக – பாஜக கூட்டணியை வைத்து என்னென்ன சர்ச்சைகள் வெடிக்கப் போகிறதோ!