சிம்லா: இமாச்சலபிரதேசம், மண்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை 10 மேகவெடிப்புகள், 3 திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து கோஹர், துனாக், கர்சோக் ஆகிய பகுதிகளில் இருந்து 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இந்நிலையில் மேலும் இருவரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழப்பு 13 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 29 பேரை தேடும் பணி நடைபெறுகிறது. இந்தப் பேரிடரில் 162 கால்நடைகள் இறந்தன. மேலும் 50-க்கும் மேற்பட்ட வீடுகள், 104 கால்நடை கொட்டகைகள், 31 வாகனங்கள், 14 பாலங்கள் மற்றும் பல சாலைகள் சேதம் அடைந்தன.
அதேவேளையில் மண்டியில் 316 பேர் உட்பட 370 பேர் மீட்கப்பட்டனர், 5 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாநில அவசர நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் காங்க்ரா,மண்டி உள்ளிட்ட 6 மாவட்டங்களின் சில பகுதிகளில் திடீர் வெள்ள அபாயம் இருப்பதாக நேற்று எச்சரிக்கப்பட்டது.