சென்னை: ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் ஆமிர் கானின் கதாபாத்திரம் தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் நாகார்ஜுனா, சவுபின் சாகீர், உபேந்திரா, ஆமிர்கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். விரைவில் இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளை தொடங்கவுள்ளது படக்குழு.
பல மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகம் செய்துவிட்டது படக்குழு. ஆனால் ஆமிர்கானின் கதாபாத்திரத்தை மட்டும் ரகசியமாகவே வைத்திருந்தது. படக்குழுவினரும் ஆமிர்கான் இப்படத்தில் நடிப்பது குறித்து வெளிப்படையாக பேசவில்லை. ஆனால் ஆமிர்கான் நடிப்பில் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘சிதாரே ஜமீன் பர்’ படத்தின் ப்ரோமோஷன் பேட்டிகளின் போது ‘கூலி’ படத்தில் தான் நடிப்பதை ஆமிர் கான் உறுதி செய்தார்.
இந்த நிலையில் ஆமிர் கானின் கதாபாத்திரத்தை படக்குழு இன்று (ஜூலை 3) அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பான போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தில் ஆமிர்கானின் கதாபாத்திர பெயர் ’டஹா’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் வாயில் பைப், கையில் டாட்டூ சகிதம் ஸ்டைலிஷ் லுக்கில் ஆமிர் கான் தோன்றுகிறார்.