பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார்.
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 85 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 2, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87, கருண் நாயர் 31, ரிஷப் பந்த் 25, நித்திஷ் குமார் ரெட்டி 1 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷுப்மன்கில் 114, ரவீந்திர ஜடோ 41 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. ஷுப்மன் கில்லும், ஜடேஜாவும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து ரன்கள் சேர்த்தனர். தனது 23-வது அரை சதத்தை கடந்த ஜடேஜா 137 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் விளாசிய நிலையில் ஜோஷ் டங்க் பந்தில் ஆட்டமிழந்தார். ஜோஷ் டங்க் வீசிய ஷார்ட் பாலை, ஜடேஜா குதிகாலை தூக்கியபடி தற்காப்பு ஆட்டம் விளையாட முயன்றார்.
ஆனால் பந்து கையுறையில் பட்டு விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்திடம் எளிதாக கேட்ச் ஆனது. 6-வது விக்கெட்டுக்கு ஷுப்மன் கில், ஜடேஜா ஜோடி சுமார் 47 ஓவர்களில் களத்தில் நின்று 203 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் நிதானமாக விளையாட ஷுப்மன் கில் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டார்.
ஷுப்மன் கில் சாதனை இரட்டை சதம்: அபாரமாக விளையாடிய ஷுப்மன் கில் 311 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 21 பவுண்டரிகளுடன் இரட்டை சதம் விளாசினார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ஷுப்மன் கில். மேலும், ஆசிய நாட்டைச் சேர்ந்த வீரர் இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதம் அடிப்பது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் 2011-ம் ஆண்டு இலங்கையின் திலகரத்னே தில்ஷான் அதிகபட்சமாக 193 ரன்கள் எடுத்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
2-வது இந்திய கேப்டன்: வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த 2-வது இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஷுப்மன் கில். இதற்கு முன்னர் 2016-ம் ஆண்டு நார்த் சவுண்ட் டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக விராட் கோலி இரட்டை சதம் அடித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
இந்தியா ரன் குவிப்பு: ஷுப்மன் கில்லுக்கு உறுதுணையாக இருந்த வாஷிங்டன் சுந்தர் 103 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த நிலையில், ரூட் பந்துவீச்சில் பவுட்ல் ஆனார். தற்போது, ஷுபன் கில் 380 பந்துகளில் 265 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் உள்ளார். அவருடன் ஆகாஷ் தீப் இணைந்துள்ளார். இந்திய அணி 141 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 564 ரன்கள் குவித்துள்ளது.