விழுப்புரம்: 20 ஆண்டுகளுக்கு பிறகு தைலாபுரத்துக்கு வந்து பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து பேசியதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம சுகந்தன் தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி. முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய் ஆகியோரது அமைச்சரவையில் இடம்பெற்றார். தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்தார். பாமக நிறுவனர் ராமதாஸுடன் நெருக்கமான நட்பை கொண்டிருந்தாலும், இருவக்கும் இடையே அரசியல் ரீதியாக மனகசப்பு இருந்தது. 2002-ல் வாழப்பாடி ராமமூர்த்தி மறைந்த பிறகு, தைலாபுரத்துக்கு வருவதை அவரது குடும்பம் முற்றிலும் நிறுத்திக் கொண்டது.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோருக்கு இடையே ‘அதிகார யுத்தம்’ நடைபெற்று வருகிறது. நீயா, நானா? என பார்த்துவிடுவோம் என அரசியல் களத்தில் கீரியும், பாம்பும் போல, இருவரும் பயணிக்கின்றனர். இதன் எதிரொலியாக, தனது பழைய நட்பு வட்டாரங்களை தைலாபுரம் இல்லத்துக்கு வரவழைத்து ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த வரிசையில், வாழப்பாடி ராமமூர்த்தி மகனும், தமிழக காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவருமான ராம சுகந்தன் இடம் பிடித்துள்ளார். தைலாபுரத்துக்கு இன்று (ஜுலை 3-ம் தேதி) வருகை தந்தவர், பாமக நிறுவனர் ராமதாஸுடன் கலந்துரையாடினார்.
பின்னர் அவர் கூறும்போது, “20 ஆண்டுகளுக்கு பிறகு தைலாபுரத்துக்கு வந்துள்ளேன். பாமக நிறுவனர் மற்றும் மூத்த தலைவர் ராமதாஸை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவரது உடல்நிலை மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து கேட்டறிந்தேன். பழைய நினைவுகளை மனதில் கொண்டு என்னிடம் பேசினார். எனது தந்தையாருக்கும், அவருக்கும் இருந்த நட்பை பற்றி பேசினார்.
அவரது குடும்பத்தினர் குறித்து கேட்டறிந்தேன். தந்தை மகன் ஒன்றிணைவது குறித்து எதுவும் பேசவில்லை. அவர்களுக்கு அறிவுரை சொல்லும் நிலையில நான் இல்லை. இது சாதாரண சந்திப்புதான். அரசியல் தொடர்பாக பேசவில்லை. தைலாபுரத்துக்கு அடிக்கடி வந்து செல்ல வேண்டும் என ராமதாஸ் அழைப்பு விடுத்தார். அவருக்கு நன்றி” என்றார்.
முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க, அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்று தமிழக வாழ்வுரிமை கட்சி தொடங்கிய வேல்முருகனின் அண்ணன் திருமால்வளவன், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோர் தைலாபுரத்துக்கு வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.