மதுரை மாநகர அமமுக மாவட்டச் செயலாளர் ஜெயபால் மற்றும் முக்கிய நிர்வாகிகள் திடீரென முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்துள்ளார்.
மதுரை மாநகர வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயபால். இவரது மாவட்டத்துக்கு கீழ் மதுரை வடக்கு, மதுரை மேற்கு ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவர், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனின் தீவிர விசுவாசியாக தொடக்கம் முதலே இருந்து வந்தார். இவர் அதிமுகவில் பகுதி செயலாளராக இருந்தார். 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் மதுரை மத்திய தொகுதியில் ஜெயபால் போட்டியிட்டார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அமமுக சார்பில் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டார்.
அமமுகவில் மிகத் தீவிரமாக கட்சிப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென ஜெயபால் தலைமையில், அக்கட்சி மாவட்ட அவைத் தலைவர் வி.கோவிந்தராஜ், மேற்கு மூன்றாம் பகுதி செயலாளர் பி.தங்கராமு, வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் சிவமுருகன், வட்டக்கழக செயலாளர் எம்.ஜெயபாண்டி, மதன்குமார், மாணிக்கம், பி.நரேஷ்குமார், ஏ.செல்வம் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சரும், மாநகர அதிமுக மாவட்டச் செயலாளருமான செல்லூர் கே.ராஜூ முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தனர்.
இதுகுறித்து ஜெயபால், ‘‘திமுக தோற்க வேண்டும் என்பதுதான் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி ஆகியோரின் எண்ணம். அந்த எண்ணத்தை நிறைவேற்றவே, தாய்க் கழகமான அதிமுகவில் இணைந்துள்ளேன். நான் அமமுக மாவட்டச் செயலாளராக வரும் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தால், நான் தனியாக ‘பூத்’ கமிட்டி போட வேண்டும், அதிமுகவும் ‘பூத்’ கமிட்டி போட வேண்டும். இது ஒற்றுமையாக செயல்படுவதற்கும், வெற்றிக்கும் வழி வகுக்காது. அதனால், நேரடியாக அதிமுகவிலேயே சேர்ந்து எங்களின் ஒற்றை எதிரியான திமுகவை வீழ்த்தும் யோசனையில் அமமுகவில் இருந்து விலகினேன். மற்றபடி யார் மீதும் அக்கட்சியில் எனக்கு வருத்தமோ, விரோதமோ கிடையாது’’ என்றார்.
அமமுக நிர்வாகி ஒருவரிடம் பேசும்போது, ‘‘2 நாட்களுக்கு முன்தான் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்படியிருக்கையில் திடீரென அதிமுகவில் சேர்ந்தது ஏனென்று தெரியவில்லை. அவரது விலகலால் கட்சிக்கு எந்த பாதிப்பும் கிடையாது. கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகளுடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினோம்’’ என்றார். ஏற்கெனவே, மதுரை மாவட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக விலகிவரும் நிலையில், தற்போது மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் ஜெயபாலும் விலகியதால், அக்கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.