சிவகங்கை: “அஜித்குமார் கொலை வழக்கில் தமிழக அரசு நடவடிக்கை சரியில்லை,” என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரை இன்று (ஜூலை 3) தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அஜித்குமார் மீது புகார் அளித்த பெண் மீதே ஏகப்பட்ட புகார்கள் வருகின்றன. அதுகுறித்து தீர விசாரிக்க வேண்டும். தவறு செய்திருந்தால் அப்பெண்ணை கைது செய்ய வேண்டும்.
மேலும் தனிப்படை போலீஸாரை ஏவிவிட்ட ஐஏஎஸ் அதிகாரி யார்? என்பதையும் அரசு வெளிக் கொண்டு வர வேண்டும்.
அஜித்குமார் கொலை வழக்கில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரியாக இல்லை. இன்னும் தீர விசாரிக்க வேண்டும். இதைத் தான் மக்களும் விரும்புகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு வெறும் வீட்டுமனை பட்டா மட்டும் கொடுத்தால் போதாது. வீடும் கட்டிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.