சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கை: திமுக ஆட்சியமைத்தது முதல் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகளில், 8,500 பேருந்துகள் புதிதாக வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பில் கால் பகுதி பேருந்துகள்கூட வாங்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
குறிப்பாக, சென்னை, மேற்கு தாம்பரத்திலிருந்து மண்ணிவாக்கம், முடிச்சூர், வண்டலூர் போன்ற பகுதிகளுக்கு இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலான ஒரு மணி நேரத்தில் 12 பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். ஆனால், வெறும் மூன்று பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக கள நிலவரம் தெரிவிக்கிறது.
இதன் காரணமாக, ஒவ்வொரு நாளும் கூடுதலாக ரூ.40 முதல் ரூ.50 செலவிட வேண்டிய கட்டாயத்துக்கு ஏழை எளிய மக்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப தமிழகம் முழுவதும் இதே நிலைமைதான். இதிலிருந்து, மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்பது தெளிவாகிறது. தமிழகத்தில் பேருந்துகள் இயங்கும் எண்ணிக்கை என்பது காகிதவடிவில்தான் இருக்கிறது என்பதை களயதார்த்தம் சுட்டிக்காட்டுகிறது.
எனவே, முதல்வர் கடந்த 4 ஆண்டுகளில் கொள்முதல் செய்யப்பட்ட புதிய பேருந்துகள் குறித்த புள்ளி விவரங்களை தெரிவிக்க வேண்டும். தேவைக்கேற்ப புதிய பேருந்துகளை வாங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.