சிவகங்கை: போலீஸ் விசாரணையில் மடப்புரம் அஜித் குமார் உயிரிழந்த வழக்கில், தனிப்படை போலீஸ் விசாரணைக்கு அழுத்தம் கொடுத்த உயர் அதிகாரி யார்? என காவல் துறை தெளிவுபடுத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்த கோயில் காவலாளி அஜித்குமார் (27), நகை திருடுபோன விவகாரம் தொடர்பான விசாரணையில் தனிப்படை போலீஸார் கடுமையாகத் தாக்கியதில் உயிரிழந்தார்.
முதல்கட்டமாக, அஜித்குமார் இறப்பு குறித்து தனிப்படை காவலர் கண்ணன் அளித்த புகாரின் பேரில் பிஎன்எஸ்எஸ் 196 (2) (ஏ) பிரிவின் கீழ் திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்தார். அதில், மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அஜித் குமார் முன்னுக்குப் பின் முரணாக தகவல் கூறியதாக மானாமதுரை டிஎஸ்பி மற்றும் திருப்புவனம் ஆய்வாளரிடம் தகவல் தெரிவித்ததாகவும், அவர்கள் தொடர்ந்து அஜித் குமாரிடம் விசாரித்து நகையை மீட்குமாறு தெரிவித்ததாகவும் தனிப்படை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது மாநில அளவில் உயர் பொறுப்பில் உள்ள போலீஸ் அதிகாரி, மானாமதுரை டிஎஸ்பிக்கு இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்குமாறு உத்தர விட்டதாக பரவலாக சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றமும் கேள்வி எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சி களும் யார் அந்த அதிகாரி என்பதை தெளிவுப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.
இந்த வழக்கு தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதால், சிபிஐ அதிகாரிகள் முறையாக விசாரித்து, யார் அந்த உயர் அதிகாரி என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் எழுந்துள்ளது.