சென்னை: விசாரணை என்ற பெயரில் கோயில் காவலாளி போலீஸாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக, போலீஸ் அதிகாரிகளின்கீழ் செயல்படும் தனிப்படைகளை கலைத்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் மீதான போலீஸாரின் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து உயர் போலீஸ் அதிகாரிகளின்கீழ் செயல்படும் தனிப்படைகளை கலைத்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவவிட்டுள்ளார். இதுதொடர்பாக மண்டல ஐஜிக்கள், காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் துணை ஆணையர்கள். போலீஸ் எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் உள்ளிட்டோரின்கீழ் செயல்படும் சிறப்பு (தனிப்படை) படைகள் நிரந்தரமாக செயல்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதாவது குற்ற வழக்குகள் நடைபெற்றால் அதில் துப்பு துலக்குவதற்காக மட்டுமே துணை ஆணையர்கள், டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தங்களுக்குகீழ் பணியாற்ற தனிப்படைகளை அமைத்துக் கொள்ளலாம் என்று புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தனிப்படையை அமைப்பதற்கும் மண்டல ஐஜிக்கள் மற்றும் காவல் ஆணையர்கள் ஆகியோரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு அதிகாரிகளின்கீழ் இயங்கும் நூற்றுக்கணக்கான தனிப்படை போலீஸாரை மாற்றுப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
விசாரணை கைதிகள்: இதனிடையே விசாரணை கைதிகளை போலீஸார் தேவை இல்லாமல் துன்புறுத்தக் கூடாது என அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காவல் நிலையத்துக்கு யாரும் புகார் அளிக்க வந்தால் உடனடியாக விசாரித்து வழக்குக்கு தகுந்தவாறு சிஎஸ்ஆர் அல்லது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். தேவையில்லாமல் லத்தியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை சுய ஒழுக்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
விசாரணை கைதிகளை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாத கஸ்டெடி இருக்கக் கூடாது. முழுமையான ரெக்கவரி என்ற பெயரில் துன்புறுத்தல் கூடாது.
விசாரணை மரணம் அல்லது விசாரணையின்போது வன்முறை இருக்க கூடாது. காவல் நிலையங்களில் பாலியல் தொடர்பான துன்புறுத்தல்கள் இருக்கக் கூடாது. காவலர்கள் சகிப்புத்தன்மையுடன் பணியாற்ற வேண்டும். கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபட கூடாது. இவ்வாறு கூறியுள்ளார்.