சென்னை: பார் கவுன்சில், மெடிக்கல் கவுன்சில் போன்ற இந்தியாவில் உள்ள முக்கிய அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி.ரமேஷ்பாபு தாக்கல் செய்திருந்த மனு: வழக்கறிஞர்களின் முக்கிய அமைப்பாக கருதப்படும் பார் கவுன்சில் மற்றும் மருத்துவர்களுக்கான மெடிக்கல் கவுன்சில், டெண்டல் கவுன்சில், பார்மசி கவுன்சில் போன்ற இந்தியாவில் உள்ள பிரதான அமைப்புகளின் நிர்வாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.
எனவே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை ஏற்கெனவே நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.மனோஜ்குமார் ஆஜராகி மாற்றுத் திறனாளிகள் சட்டத்தின்படி அவர்களுக்கு இந்தியாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து அமைப்புகளிலும் 4 சதவீத பிரதிநிதித்துவம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். இது அவர்களுக்கான சட்டப்பூர்வ உரிமை என வாதிட்டார்.
இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் தரப்பிலும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய இடஒதுக்கீடு மற்றும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.