திருச்சி மாவட்ட திமுக என்றால் அது நேரு தான் என்ற பிம்பமே இன்றளவும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. தலைமைக் கழகத்தில் முதன்மைச் செயலாளராக பதவி உயர்வுபெற்றுவிட்டாலும் சொந்த மாவட்டமான திருச்சி அரசியலை இன்னமும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பவர் நேரு. ஆனால், அவரின்றி திருச்சி திமுக-வில் எதுவும் அத்தனை எளிதில் அசைந்துவிடாது என்று தெரிந்தும் மாவட்ட திமுக எம்எல்ஏ-க்கள் இருவர் நேருவுக்கு எதிராக தங்களது மனக்குமுறலை பொதுவெளியில் பகிரங்கமாக போட்டுடைத்து வருகிறார்கள்.
நேருவின் சொந்த ஊரை உள்ளடக்கிய லால்குடி தொகுதிக்கு எம்எல் ஏ-வாக இருக்கும் சவுந்தரபாண்டியன், “எனது தொகுதிக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு கூட அதிகாரிகள் என்னை அழைக்கப் பயப்படுகிறார்கள். அதற்குக் காரணம் அமைச்சர் நேரு” என முகநூலில் முன்பு ஆதங்கப்பட்டார். இந்தப் பஞ்சாயத்து அறிவாலயம் வரைக்கும் போய் சமாதானம் செய்துவைக்கப்பட்ட பிறகும் சவுந்தரபாண்டியன் – நேரு சச்சரவுகள் முடிவுக்கு வந்தபாடில்லை.
அண்மையில், தனது மகன் திருமணத்தை நடத்தி வைக்க முதல்வர் ஸ்டாலினிடம் தேதி வாங்கித் தரும்படி சவுந்தர பாண்டியன் நேருவை அணுகியதாகச் சொல்கிறார்கள். ஆனால், நேரு இந்த விஷத்தில் அக்கறை காட்டவில்லை. மாறாக, திருமணத்துக்கு தனக்கெல்லாம் பத்திரிகை வைக்க வேண்டாம் என நேரு சொன்னதாகத் தெரிகிறது. இதனால், மாவட்ட அமைச்சரான நேருவை திருமணத்துக்கு அழைக்காமலேயே விட்டிருக்கிறார் சவுந்தரபாண்டியன். நேரு இந்தத் திருமணத்தில் கலந்துகொள்ளாவிட்டாலும் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
சவுந்தரபாண்டியனைப் போலவே, ஸ்ரீரங்கம் எம்எல்ஏ-வான பழனியாண்டியும் நேருவுக்கு எதிராக அடிக்கடி பொது மேடைகளில் எதையாவது பேசிவிட்டு கப்சிப் ஆகிவிடுகிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு, கரூர் மாவட்டத்தில் உள்ள பழனியாண்டியின் கல் குவாரியில் வருவாய்த்துறையினர் ரெய்டு நடத்தினர். அப்போது, “இதற்குக் காரணம் நேருதான்” என பொத்தாம் பொதுவில் குண்டைத் தூக்கிப் போட்ட பழனியாண்டி, பின்னர் சமாதானமானார்.
இந்நிலையில், அண்மையில் சாலைப்பாதுகாப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பழனியாண்டி, “எனது தொகுதியில் கண்ணுடையான்பட்டி, சமுத்திரம் பகுதிகளுக்கு 2 பாலங்கள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதை வேறெங்கும் மாற்றிவிடாமல் எனது தொகுதியிலேயே கட்டவேண்டும். ஏனென்றால், ஏற்கெனவே சமுத்திரம் பாலத்தை மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு மாற்றியதில் எங்கள் அமைச்சர் (நேரு) மீது எனக்கு வருத்தம் உண்டு. அடுத்தவங்க சாப்பாட்டை எடுத்து சாப்பிடக் கூடாதுல்ல” என்று தடாலடியாகப் பேசினார்.
இந்த 2 எம்எல்ஏ-க்களும் இப்படி எதையாவது பேசி நேரு வட்டாரத்தை உஷ்ணமேற்றி வரும் நிலையில், கடந்த 19-ம் தேதி அமைச்சர் நேரு தலைமையில் நடைபெற்ற திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்திலும் இவர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்திருக்கிறார்கள். 2021-ல் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளையும் திமுக கூட்டணி வசப்படுத்தியதில் நேருவுக்கு பெரும் பங்கு உண்டு. திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை தேர்தலில் யாருக்கு சீட் கொடுக்க வேண்டும்… யாருக்கு கொடுக்கக் கூடாது என தீர்மானிப்பவர் நேரு தான்.

இந்த நிலையில், நேருவுக்கு எதிராக குடைச்சல் கொடுத்து வரும் இந்த 2 எம்எல்ஏ-க்களுக்கும் இந்தத் தேர்தலில் சீட் கிடைப்பது கஷ்டம் தான் என்கிறார்கள் திருச்சி திமுக-வினர் இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர்கள், “இவர்கள் இருவருமே நேருவால் உருவாக்கப்பட்டவர்கள் தான். குறிப்பாக, சவுந்தரபாண்டியன் 4 முறை எம்எல்ஏ-வாக வலம் வரக் காரணமே நேரு தான். ஆனால் கேட்பார் பேச்சைக் கேட்டு அவர் நேருவுக்கு எதிராக நடந்து கொள்கிறார். தன்னை விமர்சித்துப் பேசுவது தெரிந்தும் பழனியாண்டிக்கு கடந்த முறை சீட் வாங்கிக் கொடுத்தார் நேரு. ஆனால், இந்தமுறை அப்படி பெருந்தன்மையாக நடந்துகொள்வாரா என்று சொல்லமுடியாது” என்றார்கள்.
இதுகுறித்து சவுந்தரபாண்டினிடம் கேட்டதற்கு, “யாருக்கு சீட் தருவது என்பதை கட்சித் தலைமை தான் முடிவு செய்யும். எனது கட்சிப் பணிகள், மக்கள் பணிகளை பார்த்து கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்” என்றார். அமைச்சர் நேருவுக்கும் உங்களுக்கும் என்னதான் பிரச்சினை எனக் கேட்டதற்கு, “அதுப்பற்றியெல்லாம் இப்ப பேச வேண்டாங்க” என்றார்.
பழனியாண்டியோ, “எனக்கும் அமைச்சருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் நல்ல நட்பில் தான் இருக்கிறோம். எங்களை பிரிக்கப் பார்க்காதீர்கள். நான் அரசியலில் வளரணும்” என்று முடித்துக் கொண்டார்.மற்ற ஊர்ப் பஞ்சாயத்துக்கெல்லாம் நாட்டாமையாக இருக்கும் அமைச்சர் நேரு, சொந்த ஊர்ப் பஞ்சாயத்தை தீர்க்கமுடியாமல் இருப்பது கஷ்டகாலம் தான்!