பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா நிதானமாக ஆடி 310 ரன்கள் எடுத்துள்ளது கேப்டன் ஷுப்மன் கில் சதம் பதிவு செய்தார்.
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் களமிறங்கினார்.
அதேவேளையில் சாய் சுதர்சன், ஷர்துல் தாக்குர் ஆகியோர் நீக்கப்பட்டு நித்திஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டனர்.
பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. ரன்கள் சேர்க்க தடுமாறிய கே.எல்.ராகுல் 26 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் போல்டானார். ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே சிறந்த நீளத்தில் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை கே.எல்.ராகுல் தாமதமாக தடுத்து விளையாட முயன்றார். ஆனால் பந்து மட்டையில் பட்டு ஸ்டெம்பை பதம் பார்த்தது.
இதையடுத்து களமிறங்கிய கருண் நாயர், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றார். அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 59 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் தனது 11-வது அரை சதத்தை கடந்தார். சீராக ரன்கள் சேர்த்து வந்த கருண் நாயர் 50 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் பிரைடன் கார்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். பிரைடன் கார்ஸ் வீசிய ஷார்ட் பாலை கால்கள் நகர்வு இன்றி கருண் நாயர் விளையாடினார். இதனால் பந்து மட்டையில் பட்டு 2-வது சிலிப் திசையில் நின்ற ஹாரி புரூக்கிடம் எளிதாக கேட்ச் ஆனது.
2-வது விக்கெட்டுக்கு கருண் நாயர், ஜெய்ஸ்வால் ஜோடி 80 ரன்கள் சேர்த்தது. மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 25 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் 62, கேப்டன் ஷுப்மன் கில் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தனர். உணவு இடைவேளைக்கு பின்னர் இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள்.
அற்புதமாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 107 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே அகலமாக வீசிய பந்தை ஜெய்ஸ்வால் கால்களை நகர்த்தால் இருந்த இடத்தில் இருந்தபடியே கட் ஷாட் விளையாட முயன்றார். ஆனால் பந்து மட்டையில் பட்டு விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்திடம் கேட்ச் ஆனது.
3-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் ஜோடி 65 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து ரிஷப் பந்த் களமிறங்கிய ரிஷப் பந்த், ஷோயிப் பஷிர் வீசிய 51-வது ஓவரில் மிட் ஆன் திசையில் சிக்ஸர் விளாசினார். தேனீர் இடைவேளையில் இந்திய அணி 53 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மன் கில் 42, ரிஷப் பந்த் 14 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
தேனீர் இடைவேளைக்கு பின்னர் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. நிதானமாக விளையாடிய ஷூப்மன் கில் 125 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார். ரிஷப் பந்த் 42 பந்துகளில், 25 ரன்கள் எடுத்த நிலையில் ஷோயிப் பஷிர் பந்தை சிக்ஸருக்கு விளாச முயன்ற போது லாங் ஆன் திசையில் ஸாக் கிராவ்லியிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து களமிறங்கிய நித்திஷ் குமார் ரெட்டி ஒரு ரன்னில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் போல்டானார்.
முதல் நாள் ஆட்ட முடிவில் 85 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மன் கில் 114, ரவீந்திர ஜடேஜா 41 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 6-வது விக்கெட்டுக்கு ஷுப்மன் கில் மற்றும் ஜடேஜா ஜோடி 99 ரன்கள் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பும்ரா விளையாடாதது ஏன்? – இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து டாஸ் நிகழ்வின் போது இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறும்போது, “பணிச்சுமையை கருத்தில் கொண்டே ஜஸ்பிரீத் பும்ரா களமிறக்கப்படவில்லை. இது எங்களுக்கு முக்கியமான போட்டி.
ஆனால் 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. அந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும். இதனால் பும்ரா அங்கு விளையாடுவார். குல்தீப் யாதவை களமிறக்குவதில் ஆர்வமாக இருந்தோம். ஆனால் பின்வரிசை பேட்டிங்கை பலப்படுத்தும் விதமாக வாஷிங்டன் சுந்தரை கொண்டு வந்துள்ளோம்” என்றார்.
கருப்பு பட்டை அணிந்த வீரர்கள்: இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான வெய்ன் லார்கின்ஸ் (வயது 71) கடந்த ஜூன் 29-ல் மரணமடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியா, இங்கிலாந்து அணி வீரர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்திருந்தனர். வெய்ன் லார்கின்ஸ் 1979 முதல் 1991-ம் ஆண்டு காலக்கட்டத்தில் இங்கிலாந்து அணிக்காக 13 டெஸ்ட், 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருந்தார்.
ஸ்டோக்ஸுடன் வாக்குவாதம்: பர்மிங்காம் டெஸ்ட் போட்டியின் 17-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரில் ஜெய்ஸ்வால் ஓடியபோது பென் ஸ்டோக்ஸ் அவரை பார்த்து ஏதோ கூறினார். இதற்கு ஜெய்ஸ்வாலும் வார்த்தைகளால் பதிலடி கொடுத்தார். அடுத்த பந்திலும் அவர்களுக்குள் ஸ்லெட்ஜிங் நிகழ்ந்தது. இதன் காரணமாகவே ஜெய்ஸ்வாலை ஆட்டமிழக்கச் செய்ததும் பென் ஸ்டோக்ஸ் ஆக்ரோஷமாக கொண்டாடினார்.