கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘சிவ சிவ’ முழக்கத்துடன் நடராஜ பெருமானை தரிசித்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ நிகழ்வு கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 30-ம் தேதி வரை நாள்தோறும் பல்வேறு ரதஙகளில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து முக்கிய திருவிழாவான தேர்த் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இரவு தேரில் இருந்து மேளதாளம் முழங்க கோயிலுக்கு வந்த ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜ மூர்த்திக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து முக்கிய திருவிழாவான ஆனித் திருமஞ்சன தரிசன விழா நேற்று நடைபெற்றது. அதிகாலை 4 மணி தொடங்கி 6 மணி வரை ஆயிரங்கால் மண்டப முகப்பு பகுதியில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பின்னர் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடந்தது.
ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமியும், அம்பாளும் திருவாபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதனை தொடர்ந்து பிற்பகல் 2.50 மணிக்கு ஆனித் திருமஞ்சன தரிசனம் நடைபெற்றது. ஆயிரங்கால் மண்டத்தில் இருந்து தீவட்டி முன்னே செல்ல, மேளதாளங்கள், வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவாமூர்த்திகள் தேவாரம், திருவாசகம் பாட, நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் முன்னுக்கும், பின்னுக்கும் சென்று நடனமாடியபடியே பக்தர்களுக்கு தரிசனம் தந்தபடியே சித்சபைக்கு பிரவேசம் செய்தனர்.
முத்துப்பல்லக்கு வீதி உலா: இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (ஜூலை.3) பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர். திருவிழாவை முன்னிட்டு நான்கு வீதி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் அளிக்கப்பட்டது.
ஆனித் திருமஞ்சனத்தை யொட்டி கடந்த இரு நாட்களாக சிதம்பரம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. கடலூர் எஸ்பி. எஸ். ஜெயக்குமார் தலைமையில் சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபட்டுள்ளனர்.சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.