தீபாவளி, பொங்கல் என்றால் ஒருசில திமுக மாவட்டச் செயலாளர்கள் கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு அன்பளிப்பு கொடுத்து அசத்துவார்கள். அதுவும் ஆளும் கட்சியாக இருந்துவிட்டால் இந்தக் ‘கவனிப்பு’ கொஞ்சம் தாராளமாகவே இருக்கும். ஆனால், இப்போது தீபாவளியும் இல்லை… பொங்கலும் இல்லை. ஆனலும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உள்ள கிளைக் கழக நிர்வாகிகள் தொடங்கி அத்தனை பேருக்கும் ரூபாய் ஐயாயிரத்தில் தொடங்கி அன்பளிப்புகளை தந்து அசத்திக் கொண்டிருக்கிறார் விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் அண்ணாச்சி.
2021 தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியைத் தவிர்த்து மற்ற 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வாக்குப் பதிவுக்கு சில தினங்களுக்கு முன்னதாக திடீரென காலமான நிலையில், அந்தத் தொகுதியை அதிமுக கைப்பற்றியது. இந்தத் தொகுதியில் அதிமுக வென்றது அண்ணாச்சியின் அரசியல் சாணக்கியத்துக்கே சவாலாக அமைந்தது.
இந்த நிலையில், கடந்த நவம்பரில் விருதுநகருக்கு அரசு நிகழ்ச்சிக்காக வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொண்டார். அப்போது, “திமுக 7-வது முறையாக ஆட்சியமைக்க வேண்டுமானால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது அவசியம்” எனப் பேசினார். அத்துடன் 2021-ல் ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுக தோற்றதற்கான காரணங்களையும் கேட்டறிந்த முதல்வர், “இந்த முறை ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியை கட்டாயம் நாம் கைப்பற்ற வேண்டும்” எனக் கூறினார்.
இதனையடுத்து, திமுக-வின் ‘பென்’ அமைப்பு நடத்திய சர்வேயின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் நிறுத்த பேராசிரியை ஒருவரை திமுக தலைமை தேர்வு செய்து வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதையடுத்தே சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி இருக்கும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் அண்ணாச்சி, இப்போதே கட்சியினரை தயார்படுத்தும் விதமாக கிளைக் கழக நிர்வாகிகள் தொடங்கி நிர்வாகிகள் அத்தனை பேருக்கும் ‘அன்பளிப்புகளை’ அள்ளித் தந்து அசத்தி வருகிறார்.
இதுகுறித்து பேசிய விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர், “கடந்த முறை ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக வெற்றி பெற்றாலும் அதன் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மற்றும் 5 பேரூராட்சிகளை திமுக தான் கைப்பற்றியது. தேர்தலில் வென்ற அதிமுக கவுன்சிலர்கள் சிலரையும் திமுக-வுக்கு இழுத்து வந்தார் அண்ணாச்சி. வத்திராயிருப்பு ஒன்றிய குழு தலைவர் பதவியை மட்டும் அதிமுக கைப்பற்றியது. அந்தத் தலைவரையும் திமுக பக்கம் சாய்த்து விட்டார் அண்ணாச்சி.
இந்த முறை ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறுத்துவதற்காக தலைமையே பேராசிரியை ஒருவரை தேர்வுசெய்து வைத்துவிட்டதாகப் பேச்சு அடிபடுகிறது. அதுபற்றி அண்ணாச்சிக்கும் தகவல் சொல்லி இருக்கிறார்கள். அதனால் தான் இப்போதே பரபரப்பாக இருக்கிறார் அண்ணாச்சி. பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம், புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை கவனிக்க ஏதுவாக கிளைச் செயலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கி இருக்கிறார் அண்ணாச்சி. சிட்டிங் அதிமுக எம்எல்ஏ மீது ஏராளமான அதிருப்திகள் இருப்பதால் எப்படியும் இம்முறை ஸ்ரீவில்லிபுத்தூரை வென்றெடுக்காமல் விடமாட்டார் அண்ணாச்சி” என்கிறார்கள்.
ராஜபாளையம் தொகுதி கடந்த 2 தேர்தல்களாக திமுக வசம் இருக்கிறது. தனது மாவட்ட எல்லைக்குள் வரும் இந்தத் தொகுதியின் கிளைக்கழக நிர்வாகிகளுக்கும் அண்ணாச்சி அன்பளிப்பு மழை பொழிய ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள். கே.கே.எஸ்.எஸ்.ஆரையும் தங்கம் தென்னரசுவையும் மருது சகோதரர்கள் என புகழ்ந்துரைப்பார் ஸ்டாலின். அந்த வகையில், அடுத்ததாக இளைய சகோதரர் எப்போது ‘அன்பு மழை’ பொழிவார் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள்.