திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு திருப்புவனம் சந்தைபேட்டை அருகே அதிமுக சார்பில் இன்று (ஜூலை 2) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில், “யார் தனிப்படை விசாரணைக்கு உத்தரவிட்டது?” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் எம்எல்ஏ தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், காவலாளி அஜித்குமாரின் மரணத்துக்கு நீதி கேட்டு, தமிழக அரசு காவல் துறையைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியது: “திமுக பிரமுகர் காரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை ஏற்றிச் செல்ல யார் அதிகாரம் கொடுத்தது?
இதை கண்டித்து அன்றைய தினம் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அஜித்குமாரின் தாய் நீதி கேட்கிறார். நீதி கேட்பது தேசக் குற்றமா? மாவட்டக் கண்காணிப்பாளர் ஏன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்? உண்மை நிலவரம் முதல்வருக்கு தெரிந்துவிட்டது. அதனால் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். தனிப்படைக்கு யார் உத்தரவிட்டது? யார் அழுத்தம் கொடுத்தது? காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், அதுகுறித்து விசாரணை அதிகாரி விசாரிக்க வேண்டும்.
இதேபோல் காவல் நிலையங்களுக்கு வரும் அனைத்து புகார்களையும், ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறையின் தனிப்படை, சிறப்பு படை விசாரிக்குமா? சாத்தான்குளம் சம்பவம் நடந்தபோது, அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். முதல்வர்தான் பொறுப்பு என்று சொன்னது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின். அவர் கூறியபடியே இச்சம்பவத்துக்கும் முதல்வர் பொறுப்பேற்க வேண்டும். அதைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த விவகாரத்தில் தொடர்ந்து நீதி கேட்டு அறவழி போராட்டத்தையும், சட்டப் போராட்டத்தையும் அதிமுக நடத்தும். விளம்பரம் தேடுவது அதிமுகவின் வேலையில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தேவையான உதவிகளை அதிமுக செய்யும்,” என்று அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் உமாதேவன், குணசேகரன், நாகராஜன், பாஜக மாவட்டத் தலைவர் பாண்டித்துரை, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.