சென்னை: ரயில்கள் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு தற்போது முன்பதிவு அட்டவணை வெளியிடப்படுகிறது. இதனால், கடைசி நேரத்தில் பயணச்சீட்டு உறுதியாகாத நிலையில், பயணத்தை மாற்றியமைக்க பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு, 8 மணி நேரத்துக்கு முன்பாக முன்பதிவு அட்டவணையை வெளியிட வேண்டும் என்ற ரயில்வே வாரிய பரிந்துரையை செயல்படுத்துமாறு துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, முன்பதிவு அட்டவணை தயாரிப்பு குறித்த விவரத்தை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிகாலை 5 முதல் பிற்பகல் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான முதல் முன்பதிவு அட்டவணை, முந்தைய நாள் இரவு 9 மணிக்கு தயாரிக்கப்படும். பிற்பகல் 2 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு 8 மணி நேரத்துக்கு முன்பாக முதல் முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும்.