திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக திமுக பெண் நிர்வாகி மீது மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
பாளையங்கோட்டை காரியநாயனார் தெரு எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்தவர் முருகன் மனைவி சாவித்திரி ( 67). வீட்டு வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது 2-வது மகன் சதீஷ்குமார் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். சதீஷ்குமாருக்கு திருநெல்வேலி மாநகராட்சியில் எலக்ட்ரீஷியன் வேலை வாங்கி தருவதாக கூறி சாவித்திரியிடம் பாளையங்கோட்டையில் வசித்து வரும் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பெண் நிர்வாகி ஒருவர் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதாக கூறி திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சாவித்திரி புகார் மனு அளித்தார்.
அதில் அவர், “எனது மகனுக்கு வேலை வாங்கி தருவதாக திமுக பெண் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். மேலும், எங்கள் வீட்டுக்கு வந்து மாநகராட்சியில் வேலை கிடைத்தால் ரூ.60 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார். இதனை உண்மை என நம்பி ரூ.3 லட்சம் ஒரே தவணையாக எங்களது நகைகளை அடகு வைத்து கொடுத்தோம். ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை வேலையும் வாங்கி தராமல் பணத்தையும் திருப்பி தராமல் இழுத்தடித்து வருகிறார்.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு சென்று விசாரித்தபோது காலி பணியிடங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துவிட்டனர். இதையடுத்து நாங்கள் கொடுத்த பணத்தை திமுக நிர்வாகியிடம் திருப்பி கேட்டோம். அப்போது அவர் தனது மகனுடன் சேர்ந்து எங்களை மிரட்டினார். எனது பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.