மதுரை: மதுரை கிரானைட் முறைகேடு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ஜூலை 21-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை கிரானைட் முறைகேடு வழக்கு மதுரை கனிமவள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் ஆஜராகி சாட்சியம் அளிக்க உத்தரவிடப்பட்டது. தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி சகாயம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்நிலையில், கிரானைட் முறைகேடு வழக்கு மதுரை கனிமவள சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரோகிணி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், அரசு தரப்பு சாட்சியான சகாயம் பாதுகாப்பு காரணங்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றார்.
இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் அரசு தரப்பின் 37-வது சாட்சியான அப்போதைய ஆட்சியர் சகாயம், ஜூலை 21-ல் காலை 11 மணிக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் வழியாக ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும். அப்போது அவருக்கு போலீஸார் தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும். அன்று அவர் ஆஜராகாவிட்டால், அவருக்கு சம்மன் அனுப்புவது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். என்று கூறி விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.