சென்னை: நிதித்துறை ஒப்புதல் அளித்தும், கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் உயர் கல்வித் துறை காலம் தாழ்த்துவதால் 7,360 கவுரவ விரிவுரையாளர்களின் குடும்பங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளன.
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் முதல் மற்றும் 2-ம் சுழற்சியில் 7,360 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் தொகுப்பூதியம் வழங்க அந்தந்த கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர் களின் விவரத்தை கடந்த மே 25-க்குள் அனுப்பி வைக்குமாறு கல்லூரிக் கல்வி ஆணையர், மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்களுக்கு மே 15 அன்று சுற்றறிக்கை விடுத்தார்.
அதன்படி, கவுரவ விரிவுரையாளர்களின் விவரம் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து மே 7-ம் தேதி முதல் சுழற்சிக்கு 5,699 பேருக்கு மே மாதம் தவிர்த்து 11 மாதங்களுக்கு தொகுப்பூதியம் வழங்க ரூ.156.72 கோடியும், மே 13-ம் தேதி 2-ம் சுழற்சிக்கு 1,661 பேருக்கு ரூ.45.67 கோடியும் கோரி கல்லூரிக் கல்வி ஆணையர் நிதித் துறைக்கு கடிதம் அனுப்பினார். அதற்கான ஒப்புதலை நிதித்துறை முதல் சுழற்சிக்கு மே 30 அன்றும், 2-ம் கழற்சிக்கு ஜுன் 7 அன்றும் வழங்கியது.
அதனையடுத்து ஜூன் 2-ல் முதல் கழற்சியிலும், ஜூன் 9-ல் 2-ம் சுழற்சியிலும் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை எண்.129 மற்றும் 140-ல் அவர்களுக்கான சம்பள ஒதுக்கீடும் குறிப்பிடப் பட்டுள்ளது. நிதித்துறை ஒப்புதல் பெறப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு ஒரு மாதமாகியும், கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் உயர் கல்வித் துறை காலம் தாழ்த்தி வருகிறது.
இதனால் ஏப்ரல் , ஜூன் மாத ஊதியம் பெற முடியாமல் 7,360 கவுரவ விரிவுரையாளர்கள் தவிக்கின்றனர். அவர்களின் குடும்பங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன. எனவே போர்க்கால அடிப்படையில் ஊதியத்தை வழங்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுரவ விரிவுரையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.