இந்தியாவில் அனைத்து ஐமேக்ஸ் திரையரங்குகளையும் ‘வார் 2’ படத்துக்காக ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இதனால் ‘கூலி’ படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 14-ம் தேதி ரஜினி நடித்துள்ள ‘கூலி’ மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் – ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள ‘வார் 2’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது ‘வார் 2’ படத்துக்காக இந்தியாவில் உள்ள அனைத்து ஐமேக்ஸ் திரையரங்குகளையும் ஒப்பந்தம் செய்துவிட்டது படக்குழு.
‘வார் 2’ படக்குழுவினரின் ஒப்பந்தத்தால், ‘கூலி’ படத்துக்கு எந்தவொரு ஐமேக்ஸ் திரையரங்கமும் கிடைக்காது என்ற சூழல் உருவாகி இருக்கிறது. ஏனென்றால் ‘வார் 2’ படக்குழுவினர் முழுமையாக 2 வாரங்களுக்கு ஐமேக்ஸ் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். இது ‘கூலி’ படத்துக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘கூலி’ மற்றும் ‘வார் 2’ ஆகிய படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இந்த இரண்டு படங்களின் உரிமைகளையும் கைப்பற்ற விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த உரிமைகள் விற்பதில் ‘கூலி’ தான் முன்னணியில் இருப்பதாக வர்த்தக நிபுணர்கள் கூறுகிறார்கள்.