ராம்சரண் குறித்த தான் தெரிவித்த கருத்து சர்ச்சையானதை தொடர்ந்து தயாரிப்பாளர் சிரிஷ் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.
தில் ராஜு தயாரிப்பில் நிதின் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘தம்முடு’. இப்படத்துக்காக முதன்முறையாக தில் ராஜுவின் சகோதரர் சிரிஷ் ரெட்டி பேட்டியளித்துள்ளார். அதில், ‘கேம் சேஞ்சர்’ குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது, ‘அப்படம் தோல்விக்குப் பிறகு என்னிடமோ, தில் ராஜுவிடமோ ராம்சரண் பேசவில்லை’ என்ற ரீதியில் குறிப்பிட்டு இருந்தார் சிரிஷ் ரெட்டி. இது ஆந்திராவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
சமூக வலைதளத்தில் ராம்சரண் ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்கள். இந்தப் பேச்சு ஆந்திரா திரையுலகிலும் சலசலப்பை உண்டாக்கியது. இது தொடர்பாக சிரிஷ் ரெட்டி கூறும்போது, “நான் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்த கருத்துகளை ரசிகர்கள் தவறாக புரிந்துக் கொண்டு மிகவும் வருத்தமடைந்துள்ளதாக அறிகிறேன்.
சிரஞ்சீவி குடும்பத்தினருடனும், ராம் சரண் உடனும் எங்களுக்கு நெருங்கிய நட்பு உள்ளது. அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எதையும் நாங்கள் ஒருபோதும் பேச மாட்டோம்” என்று அறிக்கை மூலமாக விளக்கமளித்துள்ளார். அதேபோல், தனது சகோதரரின் கருத்துகள் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதாக தில் ராஜுவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.