சிவகங்கை: ‘போலீஸ் விசாரணை மரணங்களில் உயரதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும்’ என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரை இன்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அஜித்குமார் குடும்பத்தாரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. விசாரணையின்போது மரணம் என்பது காவல் துறையின் மோசமான நடவடிக்கை. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது.
போலீஸ் விசாரணை மற்றும் காவல் நிலைய மரணங்களில் உயரதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும், அஜித்குமார் மரண வழக்கை விரைந்து விசாரனை நடத்தி 3 மாதங்களில் முடிக்க வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடையோருக்கு உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். அஜித்குமார் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.1 லட்சத்தை நாங்கள் வழங்க உள்ளோம்” என்று வேல்முருகன் தெரிவித்தார்.