அஜித் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் தயாரிப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இதற்கான கதை முடிவாகி, முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் தயாரிப்பாளர் யார் என்பது தெரியாமல் இருந்தது. முதலில் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. தற்போது அந்நிறுவனமும் விலகிக் கொண்டது.
அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையும் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. தற்போது இந்த நிறுவனம் தான் அனைத்து செலவும் செய்து வருகிறது. ஆடி மாதம் முடிந்தவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடும் வகையில், படப்பிடிப்பை திட்டமிட முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்த ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது ‘குட் பேட் அக்லி’. இதே கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அஜித் நடித்த பல படங்களில் பணிபுரிந்தவர் ராகுல். அவரது நிறுவனம்தான் ரோமியோ பிக்சர்ஸ். ‘குட் பேட் அக்லி’ படத்தின் விநியோகஸ்தரும் ராகுல்தான். அவரே அடுத்த படத்தின் தயாரிப்பாளராக மாறியிருப்பது பலரும் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.