நகராட்சி, பேரூராட்சிகளில் இயங்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்துக்குத் தேவையான தட்டுகள், டம்ளர்கள், தரைவிரிப்புகளை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகமே வாங்குமாறு தமிழக அரசு கெடுபிடி காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்கள் பசியின்றி கல்வி கற்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்கவும் தமிழக முதல்வரின் காலை உணவுத்திட்டம் 2022 செப்.15 முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தால் கிராமப்புறங்களிலுள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன் பின்னர் கிராமப் புறங்களிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
தற்போது நகராட்சி, பேரூராட்சிகளிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 முதல் விரிவுபடுத்தப் படுகிறது. இதையடுத்து நகராட்சி, பேரூராட்சிகளிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளின் நிர்வாகத்தினரே காலை உணவுத் திட்டத்துக்குரிய தட்டுகள், டம்ளர்கள், தரை விரிப்புகள் வாங்க வேண்டும் என பேரூராட்சி, நகராட்சி நிர்வாகத்தினர் கெடுபிடி செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து அரசு உதவிபெறும் பள்ளிகளின் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தமிழக முதல்வரின் காலை உணவுத்திட்டம் ஜூலை 15 முதல் நகராட்சி, பேரூராட்சிகளில் அமல்படுத்தப்படுகிறது. கடந்த ஜூன் 24-ம் தேதி சென்னையிலிருந்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் தலைமையில் நடந்த காணொலி ஆய்வுக்கூட்டத்தில், அத்திட்டத்துக்குரிய தட்டுகள், டம்ளர்கள், தரை விரிப்புகளை பள்ளி நிர்வாகமே வாங்க வேண்டும் என்று கூறப்பட்டது.
அதனை ஜூன் 27-க்குள் கொள்முதல் செய்யுமாறு சுற்றறிக்கை அனுப்பி நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளுக்கு அரசின் நிதி மூலம் இந்தப் பொருட்கள் வாங்கப்பட்டன. அதேபோன்று அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் அரசே நிதி உதவி செய்யலாம். இதில் பாகுபாடு கூடாது. இது எங்களுக்கு கூடுதல் செலவாகும். எனவே அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டத்துக்குத் தேவையான பொருட்கள் வாங்க தமிழக அரசு உதவ வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.