மதுரை: ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பழக்க வழக்கம், மத நம்பிக்கை உள்ளது. இதில் உடனடியாக நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கண்டதேவி கோயில் தேரோட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கண்டதேவியைச் சேர்ந்த கேசவமணி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “கண்டதேவி ஸ்ரீ சொர்ண மூர்த்தீஸ்வரர் திருக்கோயில் சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்தக்கோயிலில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என்றும், அனைத்து சமூக மக்களையும் இணைந்து அவர்கள் பங்களிப்புடன் திருவிழா நடத்த வேண்டும் என 2014-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு கண்டதேவி தேரோட்டத்தின் போது அனைத்து சமூக மக்களும் தேரின் வடத்தை பிடித்து இழுக்க டோக்கன் வழங்கப்பட்டது. இருப்பினும் முதல் மரியாதை பெறும் நோக்கத்தில் சிலர் அவர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அதிகளவில் அழைத்துச் சென்று தேரின் வடத்தை பிடித்ததால் பிற சமூக மக்கள் தேரின் வடத்தை பிடித்து இழுக்க முடியாத சூழல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவானது.
இந்த ஆண்டு ஜூலை 8-ல் கண்டதேவி தேரோட்டம் நடைபெறுகிறது. அப்போது பட்டியல் சமூகத்தினர் தேரின் வடத்தை பிடித்து இழுப்பதற்கு வசதியாக யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என அதிகாரிகளிடம் மனு அளித்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கண்டதேவி கோயில் தேரோட்டத்தில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வில் இன்று (ஜூலை 2) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில், “ஏற்கெனவே உள்ள உத்தரவுப்படி கடந்த ஆண்டு முறைப்படி மரியாதை செலுத்தப்பட்டது. கோயில் தேரோட்டத்தில் எந்த பாகுபாடும் இல்லாமல் பங்கேற்றனர். இந்த ஆண்டும் அதேபோல் தோரோட்டம் நடைபெறும்,” என தெரிவிக்கப்பட்டது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், “இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயிலில், யாருக்கும் முதல் மரியாதை வழங்கப்படக் கூடாது. தேரோட்டதில் பட்டியலின மக்களை பங்கேற்க விடாமல் தடுக்கின்றனர்.” என வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “சாதி பாகுபாடு இருந்தால், உரிய அமைப்பிடம் அதிகாரிகளிடம் சென்று முறையிட்டு நிவாரணம் பெறலாம். ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு பழக்க வழக்கம் உள்ளது. மத நம்பிக்கை உள்ளது. இதில் உடனடியாக நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. மேலும், இது குறித்த வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணையில் இருப்பதால் தற்போது நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது” என கருத்து தெரிவித்து வழக்கை முடித்துவைத்தனர்.