சென்னை: தமிழகத்தில் இயற்றப்பட்ட தமிழ்க் கற்றல் சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பின்னும், 18 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படாதது ஏன் என தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து தமிழ் ஆர்வலரும், பேராசிரியருமான ஆ.பிரம்மநாயகம் கூறியது: ‘இந்தியாவின் முதல் தேசிய கல்விக் கொள்கையை 1968-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். அதில் மும்மொழிக் கொள்கையும், இந்தியும் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அப்போதைய தமிழக முதல்வர் அண்ணாதுரை கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அத்துடன் தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால், அந்த இருமொழிகளில் ஒன்றான தமிழ் கட்டாயம் என்று கூறப்படவில்லை. அவருக்குப் பின்னர் தமிழகத்தை ஆண்ட முதல்வர்களும் தமிழ் கட்டாயம் என தெளிவாகக் கூறவில்லை. அதேபோல், தமிழகத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழில் பெரிதாக பெயர்ப்பலகை இருக்க வேண்டுமன 1948-ல் வரையறுக்கப்பட்ட சட்டத்தையும் யாரும் பொருட்படுத்தவில்லை.
பல்வேறு இடங்களில் ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளிலும், தமிழில் சிறிய எழுத்துகளிலும் இருந்த பெயர்ப் பலகைகளில் தற்போது முழுவதுமாக ஆங்கிலம் மட்டுமே முதன்மையாக உள்ளது. முன்னாள் அமைச்சர் மு.தமிழ் குடிமகன் சட்டத்தை உறுதியாக நடைமுறைப்படுத்தி தமிழகம் எங்கும் தமிழ்ப் பெயர்ப் பலகையை அமைக்க வழி வகுத்தார். ஆனால் அவருக்குப் பின்னர் பெயர்ப் பலகைகள் மீண்டும் ஆங்கிலத்துக்கே மாறின.
2006-ம் ஆண்டு அன்றைய முதல்வர் மு.கருணாநிதி இயற்றிய தமிழ் கற்றல் சட்டத்தை 2007-ல் உயர் நீதிமன்றமும், 2008-ல் உச்சநீதிமன்றமும் உறுதி செய்த பின்னரும்கூட 18 ஆண்டுகளாகியும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. மத்திய அரசின் பாடத்திட்ட பள்ளிகளில் இன்றைய சூழலில் தமிழகத்தில் தமிழ் 3-வது பாடமாகவும், இந்தி அல்லது சமஸ்கிருதம் 2-வது பாடமாகவும் நடைமுறையில் உள்ளது.
வெளி மாநிலங்களிலிருந்து வரும் மாணவர்கள் எவ்வாறு தமிழை படித்து தேர்வெழுத முடியும் என்கிறார்கள். ஆனால் கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் அவரவர் மொழிகளில் படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்து 9, 10-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு விலக்கு அளிப்பதில் தவறில்லை. ஆனால் 6 முதல் 8-ம் வகுப்புகளில் சேரும் மாணவர்களுக்கு விலக்கு தேவையில்லை. அவர்கள் தமிழ் கற்க தனி பாடநூல்கள் உருவாக்கி 10-ம் வகுப்பு தேர்வெழுத வைக்க வேண்டும்.
திருமுருகன் என்பவர் பெயர்ப் பலகைகள் சட்டத்தை ஏன் அமல்படுத்தவில்லை என இரு பொதுநல வழக்குகளை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார். 2-வது வழக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்காகும். அப்போது வெறும் ரூ.50 மட்டுமே அபராதத் தொகையாக விதிக்கப்பட்டதால் அதை யாரும் பொருட்படுத்தவில்லை. அந்த அபராதத் தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்துவோம் என தமிழக அரசு தெரிவித்தது. இந்த விவகாரத்தில் சட்டப்படி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அதிகாரிகள் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தமிழ்க் கற்றல் மற்றும் தமிழில் பெயர்ப் பலகைச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வரும்” என்று அவர் கூறினார்.