‘ரூல் கர்வ்’ முறையினால் முல்லை பெரியாறு அணைக்கு வரும் உபரிநீர் கேரளப் பகுதிக்கு தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கனமழை பெய்தும் தண்ணீரை அணையில் சேமிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ‘ரூல் கர்வ்’ முறையை நீக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாக 1979-ம் ஆண்டு கேரளாவில் வதந்தி பரவியது. இதனைத் தொடர்ந்து நீர்மட்டம் 152 அடியில் இருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது. பின்பு உச்ச நீதிமன்றம் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளவும், பேபி அணையைப் பலப்படுத்திவிட்டு 152 அடியாக உயர்த்தலாம் என்றும் உத்தரவிட்டது. ஆனாலும் அணையில் தமிழ்நாடு சார்பில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரளா தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது.
இந்நிலையில் மத்திய நீர்வளத் துறை ஆணையம் சார்பில் நீர்தேக்க வரைமுறை விதிகள் (ரூல் கர்வ்) பின்பற்றப் படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாதமும் அணையில் தேக்க வேண்டிய நீர்மட்டத்தின் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு ஜூன் 30-ம் தேதி வரை 136 அடி அளவுக்கே நீர் தேக்க வரையறுக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 வரை 137 அடிக்கே அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தைப் பொறுத்தளவில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும் காலம் ஆகும். இந்த காலகட்டத்தில் அங்கு கனமழை பெய்து வெள்ளம் ஏற்படும். இந்நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்கியது. இதனால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்து கடந்த 28-ம் தேதி நீர்மட்டம் 136 அடியை எட்டியது. ‘ரூல்கர்வ்’ விதிமுறைப்படி ஜூன் மாதத்தில் இதற்கு மேல் தண்ணீரை உயர்த்தக் கூடாது என்பதால் கேரளப் பகுதிக்கு 29-ம் தேதியே நீர் திறக்கப்பட்டது.
தொடக்கத்தில் 250 கனஅடி அளவுக்கு வெளியேற்றப்பட்ட நீரின் அளவு பின்னர் 363 கன அடியாக அதிகரிக்கப் பட்டது. தொடர்ந்து கேரளப் பகுதிக்கு தற்போது வரை தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்த நீர் வல்லக்கடவு, சப்பாத்து, வண்டிப்பெரியாறு, மஞ்சுமலை, உப்புத்துறை, உடும்பன்சோலை வழியாக இடுக்கி அணைக்குச் செல்கிறது. பின்பு அங்கு மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு அரபிக்கடலில் இந்த நீர் கலக்கிறது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் முக்கிய பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக பெரியாறு அணை உள்ளது. மழைக் காலங்களில் நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் ஒவ்வொரு ஆண்டும் கடல் பகுதிக்கு நீரை திருப்பி விடுவது தமிழக விவசாயிகளிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுவிக் பாலசிங்கம் கூறுகையில், 142 அடி அளவுக்கு நீரைத் தேக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்பு ‘ரூல் கர்வ்’ முறையை எதற்காக பின்பற்ற வேண்டும். தென்மேற்கு பருவ மழையின்போது தான் அணைக்கு கூடுதல் நீர் வரும், எனவே அப்போதுதான் அதிக தண்ணீரை தேக்க முடியும். அணை நீரை உயர்த்த விடாமல் செய்யும் ‘ரூல் கர்வ்’ விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் விவசாயிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறும், என்றார்.
ரூல் கர்வ் அட்டவணை: முல்லை பெரியாறு அணையில் அமல்படுத்தப்பட்டுள்ள ரூல்கர்வ் விதிமுறைப்படி ஜூலை 20-ம் தேதி வரை 136.40 அடிக்கும், ஜூலை 21-ம் தேதி முதல் 31 வரை 137 அடி, ஆகஸ்ட் 10 வரை 137.50 அடி, ஆகஸ்ட் 20 வரை 138.40 அடி, ஆகஸ்ட் 31 வரை 139.80 அடி, செப்டம்பர் 10 வரை 140.90 அடி, செப்டம்பர் 20 வரை 142 அடி தண்ணீரும் நிலைநிறுத்தலாம். பின் செப்டம்பர் 30-ல் 140 அடி வரை குறைத்து, அக்டோபர் 31-ல் 138 அடியாகவும் பின் நவம்பர் 30 முதல் மார்ச் 31 வரை படிப்படியாக 142 அடி வரையும் தண்ணீர் நிலை நிறுத்தலாம்.