தென்காசி: சங்கரன்கோவிலில் நகராட்சி தலைவருக்கு எதிராக அதிமுக, திமுக கவுன்சிலர்கள் இணைந்து கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. வாக்கெடுப்பில் 28 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் திமுகவைச் சேர்ந்த உமாமகேஸ்வரி நகராட்சி தலைவர் பதவியை இழந்தார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சி மொத்தம் 30 வார்டுகளை கொண்டது. உள்ளாட்சி தேர்தலில் 12 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றது. திமுக 9 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மதிமுக 2 வார்டுகளிலும், காங்கிரஸ், எஸ்டிபிஐ தலா ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.
திமுக சார்பில் உமா மகேஸ்வரி, அதிமுக சார்பில் முத்துலெட்சுமி ஆகியோர் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். மதிமுக, காங்கிரஸ், எஸ்டிபிஐ, சுயேச்சை கவுன்சிலர்கள் ஆதரவுடன் உமா மகேஸ்வரிக்கு 15 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்துலெட்சுமிக்கு 15 வாக்குகளும் கிடைத்தன. இருவரும் சமநிலை அடைந்ததால் குலுக்கல் முறையில் நகராட்சி தலைவராக உமா மகேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக அதிமுகவை சேர்ந்த கண்ணன் (எ) ராஜு என்பவர் உள்ளார்.
ஒரு சில மாதங்கள் மட்டுமே நகராட்சி கூட்டம் அமைதியாக நடைபெற்றது. பின்னர் நகராட்சி தலைவருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இதனால் நகராட்சி கூட்டங்களில் வாக்குவாதம், தீர்மானங்களை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டு அதிமுக கவுன்சிலர்களுடன் திமுக கவுன்சிலர்களும் இணைந்து நகராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தனர். அப்போது இந்த பிரச்சினையில் திமுக தலைமை தலையிட்டு, சமரசப்படுத்தியதால் நகராட்சி தலைவரின் பதவி தப்பியது.
இருப்பினும் தொடர்ந்து புகைச்சல் இருந்து வந்தது. பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை, நகராட்சியில் முறைகேடுகள் நடைபெறுகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அதிமுக, திமுக கவுன்சிலர்கள் உட்பட 24 பேர் கையெழுத்திட்டு, நகராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி கடந்த மாதம் 2-ம் தேதி நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து, திமுக தலைமை இரு தரப்பையும் அழைத்து பேசி, சமாதான முயற்சிகளை முன்னெடுத்தது. திமுகவைச் சேர்ந்தவர் பதவியை இழந்தால் அது சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதால் அதிருப்தி கவுன்சிலர்களை சமாதானப்படுத்த தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் பொறுப்பை திமுக தலைமை ஒப்படைத்தது. நகராட்சி தலைவர் மீது மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு கூட்டம் இன்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நகராட்சி தலைவர் பங்கேற்கவில்லை. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் முடிவு என்ன ஆகும் என்று முன்கூட்டியே ஊகிக்க முடிந்தது.
நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 28 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். திமுகவைச் சேர்ந்த ஒரு கவுன்சிலர் மட்டுமே தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தார். பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி நகராட்சி தலைவர் பதவியை இழந்ததாக அறிவிக்கப்பட்டது. புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். திமுகவைச் சேர்ந்த நகராட்சி தலைவருக்கு எதிராக அதிமுக கவுன்சிலர்களுடன் திமுக கவுன்சிலர்களும் சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து வெற்றி பெறச் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.